தமிழ் மாணவன் மீதான தாக்குதல் அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றது: த.தே.கூ.

தமிழ் மாணவன் மீதான கொடூரத் தாக்குதல் சம்பவமானது சிறுபான்மையின மக்கள் மீது இலங்கையில் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது என்றும் இவ்வாறான அடக்கு முறைகளும் தாக்குதல் சம்பவங்களும் தமிழ் மாணவர்கள் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டி மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கடுமையான கண்டனத்தை வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்(தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன்  கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

03.08.2014 அன்று அதிகாலை 2 மணியளவில் மாணவர்கள் விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க மற்றுமொருவர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் தாக்கியதாகவும் இதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான மாணவன் தெரிவித்துள்ளார்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொச்சைத் தமிழில் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடந்த மாதம் 20ஆம் திகதி மாணவர்களின் கழிப்பறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனையடுத்து அதேபோன்ற சுவரொட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அந்த கழிப்பறையில் வைத்தே மேற்படி மாணவன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மாணவன் மீதான தக்குதல் சம்பவமும் ஏனைய மாணவ மாணவிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களும் கண்டிக்கப்பட வேண்டியவை. சிங்கள மாணவர்களினால் விடுக்கப்பட்ட இத்தகைய அச்சுறுத்தல்கள்  தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் அச்சுறுத்தல்களும் எதிர்காலத்தில் பாரியவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் புரிந்துகொள்வதோடு  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply