இனவாதத்தை தூண்டும் SMS பகிர்ந்ததாக நான்கு முஸ்லீம்கள் கைது

இலங்கை முஸ்லிம்களுக்குள் பீதியை ஏற்படுத்தக்கூடிய செய்தியை தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் பரப்பியதாக குற்றம் சாடப்பட்டு நான்கு முஸ்லிம்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டனர். இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நான்குபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கூறும்போது, இனவாதத்தை துண்டும் SMS செய்தியொன்று முஸ்லிம் மக்களிடையே பரப்பப்பட்டு வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அது குறித்து தாங்கள் தங்களின் விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் கூறினர்.

சம்பந்தப்பட்ட sms செய்திகள் இந்த நான்கு சந்தேக நபர்களின் கைதொலைபேசி ஊடாகவே அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் சந்தேகநபர்கள் சர்வதேச ரீதியல் வைத்திருக்கும் தொடர்புகள் சம்பந்தமாகவும் தாங்கள் தற்போது விசாரித்து வருவதாகவும் அறிவித்தனர். இந்த விசாரணைகள் முடியும்வரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறும் காவல்துறையினர் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

காவல்துறையின் இந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தமக்குக் கிடைத்த செய்தியொன்றை தம் நண்பர்களிடையே பகிர்ந்தளிப்பது ஒரு குற்ற செயல் அல்ல என்று வாதிட்டனர்.

லங்கா ஈநியூஸ் என்கிற இணையதளத்தில் கடந்த 30ஆம் தேதி பிரசுரிக்கப் பட்டிருந்த செய்தியொன்றையே இவர்கள் இவ்வாறு sms மூலம் பகிர்ந்ததாக கூறிய எதிர் தரப்பு வழக்கறிஞர் எம்.எம்.சுகயிர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று வாதாடினார்.

வழக்கு விசாரணையின் இறுதியில் இந்த நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினம் காவல்துறையினரின் விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்ப்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையிக்கு உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply