சோனியா, ராகுல் மீதான வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவினால் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. தற்போது வெளிவராத அந்தப் பத்திரிகைக்கு புத்துயிரூட்ட அசோஷியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி வட்டியின்றி ரூ.90 கோடி கடன் வழங்கியது. இந்தப் பத்திரிகையின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும், கட்சியின் துணைத்தலைவருமான ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனிநபர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் சோனியா, ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் அறங்காவலர் சுமன் துபே ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோமதி மனோச்சா, உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதை எதிர்த்து சோனியா, ராகுல் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். டெல்லி ஐகோர்ட்டு சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராவதற்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கின் விசாரணையை 13-ந் தேதி வரை ஒத்தி வைத்தது.
இதற்கிடையே, நேற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா முன்னிலையில், சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. சோனியா, ராகுல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, தனது கட்சிக்காரர்கள் நேரடியாக ஆஜராவதற்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து இருப்பதாகவும், வழக்கின் விசாரணையை 13-ந் தேதிவரை ஒத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாம் பிட்ரோடா தற்சமயம் அமெரிக்காவில் இருப்பதால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என்று கூறினார்.
தானே ஆஜராகி வாதாடிய சுப்பிரமணியசாமி, தனக்கு அனுமதி அளித்தால் அந்த சம்மனை, தானே அமெரிக்காவுக்கு அனுப்ப முடியும் என்று கூறி, சம்மன் அனுப்பாததற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சுப்பிரமணியசாமியின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, சாம் பிட்ரோடாவுக்கு மற்றொரு புதிய சம்மனை அமெரிக்காவுக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply