வடக்கு மாகாண ஆளுநர் நிதியம் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது:முதலமைச்சர்

மாகாணத்தின் அதிகாரங்களையும் செயற்றிட்டங்களையும் செயற்படுத்த முதலமைச்சர் நிதி நியதிச்சட்டத்தை உருவாக்குவதற்கு மாகாண சட்டங்களின் பிரகாரம் வடமாகாண சபைக்கு முழுத் தகுதி உண்டு. ஆனால் ஆளுநர் நிதியம் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை வடமாகாண ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும். வடக்கு மாகாண சபையால் ஆளுநரின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதி நியதிச் சட்டங்களின் சட்ட வலிமை குறித்து மதிப்பிடுமாறு ஆளுநரிடம் கோரப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட மூன்று நிதி நியதிச்சட்டங்கள் ஆளுநரின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டு அவற்றில் இரண்டு ஆளுநரினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆவது வடமாகாண சபை அமர்வில் மூன்று நிதி நியதிச் சட்டங்களும் காரசாரமான விவாதங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஆளுநரால் அங்கீகரிக்கப்படாத முதலமைச்சர் நிதி நியதிச் சட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாகவும் ஆளுநர் நிதியம் எந்த சட்ட வரையறைக்குள் உட்பட்டது என கேள்வி எழுப்பியும் வடமாகாண முதலமைச்சர் வடமாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள விளக்கக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டம் தொடர்பான பரிந்துரைகள் எனத் தலைப்பிட்டு அவர் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையினால் வகுக்கப்பட்ட நிதி நியதிச் சட்டங்களின் சட்ட வலிமை குறித்து மதிப்பிடுமாறு ஆளுநரிடம் கோரப்படவில்லை என வடமாகாண அமைச்சரவை தெரிவித்துள்ளது.

முதலமைச்சரின் நிதி நியதிச் சட்டம் 1987 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட மாகாண சபையின் சட்டப் பிரிவு 23 அல்லது 24 இல் குறிப்பிடப்பட்டதன்படி ஆளுநரின் அங்கீகாரம் பெறவேண்டியதல்ல. அதன் பிரகாரம் இம் மாகாண சபை இயற்றும் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டத்திற்கு நேரான அல்லது எதிரான ஆளுநரின் பரிந்துரை தேவையற்றது.

மாகாணத்தில் இரண்டு நிதியங்கள் மட்டுமே இருக்கலாம் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஆளுநர் நிதியம் என்ற ஒன்றை அவர் நடைமுறைப்படுத்தி வருகின்றார். இது எந்த சட்ட நடைமுறைக்குள் வருகின்றது என்பதை அவர் விளக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 9ஆவது மாகாண சபைப் பட்டியலில் 37 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வரிகள், தீர்வைகள் என்பவை சார்பாக நியதிச் சட்டங்களை வகுப்பதற்கும் அவ்விடயங்கள் சார்பாக மாகாண சபையின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நியதிச் சட்டங்களை வகுக்கலாம் என 36ஆவது பிரிவு குறிப்பிடுகின்றது.

மாகாண சபைச் சட்டங்கள், பாராளுமன்றச் சட்டங்கள் குறிப்பிடும் கடமைகளையும் அதிகாரங்களையும் செயற்படுத்த முதலமைச்சர் நிதியை உருவாக்குவதற்கு மாகாண சபைக்கு அரசியலமைப்பு ரீதியான தகுந்த அதிகாரம் உண்டு.

முதலமைச்சரின் நிதி நியதிச் சட்டம் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாடு உள்ளதால், அந்நிதியம் அனைவருக்கும் வெளிப்படைத் தன்மையுடையது என்பதை வடமாகாண சபையின் அமைச்சரவை ஆளுநருக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றது.

ஊவா மாகாண சபையில் 1993ஆம் ஆண்டின் அனுமதிக்கப்பட்ட 2ஆவது நியதிச் சட்டம் ஊவா மாகாண சபையின் முதலமைச்சரின் நிதியமாகும். இதேபோன்றதொரு நியதிச் சட்டம் வடக்கு, கிழக்கு மாகாண சபையால் உருவாக்கப்பட்டு அமுலில் இருந்துள்ளது. 1989 இன் 3 ஆம் நியதிச்சட்டம் 1989 ஒக்டோபர் 19இல் வடக்கு, கிழக்கு மாகாண சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1989 அக்டோபர் 23இல் ஆளுநரின் அங்கீகாரத்தைப் பெற்றது.

வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளும் தங்களுக்கான முதலமைச்சர் நிதி நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இதேபோன்றே வடமாகாண சபையும் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டத்தை உருவாக்கியுள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply