ஈராக் போராளிகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சு: நட்பு நாடுகள் ஆதரவு
ஈராக்கில் போராளிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீச்சுக்கு நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மொசூல், கிர்குக் உள்ளிட்ட 15 நகரங்களை கைப்பற்றியுள்ளனர். தன்னாட்சி அதிகாரம் படைத்த குர்தீஷ்தானில் தாக்குதல் நடத்தி அங்கும் பெரும்பாலான பகுதிகளை பிடித்தனர். அங்கு வாழும் ‘யாஷிடி’ என்ற பூர்வீக குடிமக்களை வெளியேற உத்தரவிட்டனர். இதனால் அச்சம் அடைந்த சுமார் 40 ஆயிரம் பேர் சிஞ்சர் மலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.அங்கு உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவிக்கும் அவர்களுக்கு உதவ அமெரிக்கா முன்வந்தது. இதற்கிடையே குர்தீஷ்தான் தலைநகர் எர்பில் நோக்கி முன்னேறும் போராளிகளை தடுக்கும் படி ஈராக் மற்றும் குர்தீஷ்தான் மாகாண அரசுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தன.
எனவே, ‘யாஷிடி’ பூர்வீக குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும், எர்பில் நகரில் இருந்தபடி போராளிகள் மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்க ராணுவத்துக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பூர்வீக குடிமக்களுக்கு உணவு, தண்ணீரை விமானங்கள் மூலம் அமெரிக்கா வீசியது. இதற்கிடையே எர்பில் நகரில் குர்தீஷ் படைகள் மீது போராளிகள் பிரங்கி தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் அமெரிக்க போர் விமானங்கள் பதிலுக்கு வான் வழி தாக்குதலில் ஈடுபட்டன.
அமெரிக்காவின் ‘எப்.ஏ. 18’ போர் விமானங்கள் எர்பில் அருகே போராளிகள் நிலைகள் மீது சுமார் 225 கிலோ எடை கொண்ட (லேசர் வழிகாட்டும்) ராட்சத குண்டுகளை வீசின.
இத்தகவலை அமெரிக்கா ராணுவத்தலைமை செயலகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் நியூர் அட்மிரல் ஜான்கிர்பை டூவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தாக்குதல் நடத்தப்படுவதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் எர்பில் நகரில் தங்கியிருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை காக்கவே குண்டு வீசுவதாக பென்டகன் கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறும் போது, அமெரிக்க நடவடிக்கையை வரவேற்பதாகவும் ஆபத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் பாதுகாப்புக்காகவும் இது மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே கூறும் போது, ‘‘ஈராக்கில் பொதுமக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்டுவதற்கு இதில் பங்கேற்க நாங்களும் தயார். இது குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஈராக் நிலைமை குறித்து குர்தீஷிதான் மாகாண அரசுடன் பேசியுள்ளார். இந்த போரில் அமெரிக்காவுடன் பிரான்ஸ் ராணுவமும் ஈடுபடும் என்பதை குர்தீஷ்தான் மாகாண தலைவர் மசூத் பர்ஷானி உறுதி செய்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply