காஸா மீது இரண்டாவது நாளாக இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை
இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான 72 மணி நேர தற்காலிக போர்நிறுத்த நேரம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீது முதலில் ஹமாஸ் படையினர் நேற்று ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் வகையில் காஸா பகுதியின் மீது நேற்று 51 முறை பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உள்பட 6 பேர் பலியாகினர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
இரண்டாவது நாளாக இன்றும் காஸா பகுதியில் தாழ்வாக பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள் அங்குள்ள முக்கிய தலைவர்களின் பதுங்குமிடங்கள், ஆயுத கிடங்கு ஆகியவற்றின் மீது குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய அலுவலர் மோவாஸ் ஸயித் உள்பட 5 பேர் பலியாகினர்.
இஸ்ரேல் நடத்திய இன்றைய தாக்குதலில் 3 மசூதிகள் தரைமட்டமாகி விட்டதாகவும், இதுவரை சுமார் 150 மசூதிகளை இஸ்ரேல் விமானப்படையினர் குண்டு வீசி தகர்த்துள்ளதாகவும் பாலஸ்தீன வானொலி செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலுடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறுதி வரை போராடுவது என்று ஹமாஸ் இயக்கம் முடிவெடுத்துள்ளதாக அவ்வியக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஃபவுஸி பர்ஹம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காஸா பகுதி மீது கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் சுமார் 1900 பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர். பலியான 1900 பேரில் 429 அப்பாவி குழந்தைகள் மற்றும் 1,354 பேர் பெண்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்று ஐ.நா.சபை கணக்கிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply