தமிழர் பிரச்சினையில் யார் தவறு செய்தாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : பழ.நெடுமாறன்
தமிழர் தேசிய முன்னணி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசினார். துணைத் தலைவர் அறிவரசன், திரைப்பட இயக்குனர் கவுதமன், மாநில பொதுச்செயலாளர் முருகன், நிர்வாகிகள் பரந்தாமன், ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழர் தேசிய முன்னணி, புதிய கட்சியோ, புதிய அமைப்போ அல்ல. 30 வருடங்களுக்காக தமிழக மக்களுக்கு பணியாற்றி வருகிறது. தற்போது இளைஞர்களுக்கு அரசியல் குறித்த பயிற்சி முகாம் நடத்துவதற்காக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து மக்களுக்கான திட்டங்களை சரிவர செயல்படுத்தாமல் வருகிறது. அந்த கட்சிகளுக்கு மாற்று முயற்சியை ஏற்படுத்துவோம்.
நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. மேலும் இயற்கையை சூறையாடுகின்ற செயலும் அதிகரித்து உள்ளது. இப்படி இயற்கையை அளவுக்கு அதிகமாக சூறையாடிவிட்டால் வருங்கால சந்ததியர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், தற்போது வந்துள்ள பாரதீய ஜனதா அரசும் ஒரே மாதிரியான நடவடிக்கையை தான் எடுத்து உள்ளது.
இவர்கள் சிங்களர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். மத்திய அரசின் அணுகு முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் மற்றும் சிங்களர்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மீனவர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க வேண்டும். இவர்கள் ஆயுதம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை பாராளுமன்ற இரு அவைகளிலும் நிர்பந்தம் செய்ய வேண்டும்.
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசு பெரிய துரோகம் செய்தது. இந்த துரோகத்திற்கு தமிழக மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தகுந்த பதில்அடி கொடுத்து விட்டார்கள். இதனால் தான் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. தமிழர் பிரச்சினையில் யார் தவறு செய்தாலும் அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது குறித்து பாராளுமன்ற இரு அவை களிலும் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெற வில்லை என்றால் ஒப்பந்தம் தானாக காலாவதியாகி விடும். நமது பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை. எனவே கச்சத்தீவை உடனே நாம் மீட்க வேண்டும்.
கச்சத்தீவை நாம் மீட்டு நமது உரிமையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு அது குந்தகம் விளைவிக்கும். இலங்கை அரசு கச்சத்தீவை சீனாவுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறது. எனவே மத்திய அரசு கச்சத்தீவை மீட்டு நமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply