அமெரிக்கா குண்டு வீச்சு ஈராக் தீவிரவாதிகளின் ஆயுத லாரிகள் அழிப்பு

ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் அரசுக்கு எதிராக செயல்படும் சன்னி பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். திக்ரித், கிர்கிக், மொசூல் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு ஈராக் நகரங்களை கைப்பற்றியுள்ளனர். இவற்றையும், சிரியாவில் பிடித்த சில பகுதிகளையும் இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். தற்போது ஈராக்கில் தன்னாட்சி பெற்றுள்ள குர்தீஷ்தான் பகுதியிலும் தாக்குதல் நடத்தி அங்கும் சில இடங்களை பிடித்துள்ளனர்.

அங்கு வாழும் யாஷிடி பூர்வீக இன குடி மக்களை வெளியேற்றினர். எனவே தற்போது 40 ஆயிரம் பேர் சிஞ்சர் மலையில் தங்கியுள்ளனர். உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்தனர். கடும் வெப்பம் மற்றும் தாகத்தால் யாஷிடி இனத்தை சேர்ந்த 40 குழந்தைகள் உயிரிழந்தனர்.

எனவே அவர்களுக்கு உதவ அமெரிக்கா முடிவு செய்தது. அங்கு தங்கிருக்கும் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வினியோகிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர்களுக்கு 72 பண்டல்கள் மூலம் உணவு மற்றும் தண்ணீரை அமெரிக்க ராணுவ போர் விமானங்கள் வீசின. இப்பணியில் சி–17 மற்றும் சி–130 சரக்கு விமானங்கள் ஈடுபட்டன.

மேலும், ஈராக்கின் குர்தீஸ் இன பூர்வீக குடிமக்களை காப்பாற்றவும், அப்பகுதியில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாக்கவும் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஒபாமா உத்தரவிட்டார். அதன்படி குர்தீஷ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியது.

குர்தீஷ்தான் மாகாண தலைநகர் இர்பில் நோக்கி முன்னேற விடாமல் தடுத்தனர். இருந்தும் அங்கு அமெரிக்க போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 4 தடவை தீவிரவாதிகள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன.

பதிலுக்கு சிஞ்சர் பகுதியில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். எனவே, ஈராக்கில் குர்தீஷ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது. அதற்கான கால கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என ஒபாமா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர் ஈராக்கில் ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நூரி அல்–மலிக்கிக்கு பதிலாக புதிய பிரதமர் நியமிக்க வேண்டும். அதற்கு ஈராக் அரசியல் தலைவர்கள் கூடி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றார். இதற்கிடையே சிஞ்சர் மலையில் தங்கியருக்கும் யாஷிடி இன மக்களுக்கு அமெரிக்க விமானங்கள் நேற்று 3–வது தடவையாக உணவு மற்றும் தண்ணீரை சப்ளை செய்தது. இதுவரை 3,800 காலன் தண்ணீரும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப் பட்டுள்ளன.

இதற்கிடையே, அமெரிக்க போர் விமானங்கள் நடத்தி வரும் தொடர் குண்டு வீச்சில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த பல லாரிகள் அழிக்கப்பட்டன.

அத்துடன் தீவிரவாதிகளின் ஆயுதக் குவியல்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும் கருவிகளும் தகர்க்கப்பட்டன. இந்த தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply