யாழ் மாநகரசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முனைப்பு

வடபகுதியை முழுமையாக மீட்டபின்னர் வடக்கில் தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், யாழ் மாநகரசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முனைப்புக்காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
யாழ் மாநகரசபையைக் கலைத்து அங்கு தேர்தலொன்றை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்தவாரம், தேர்தல்கள் ஆணையாளரைச் சந்திக்கவிருப்பதாகத் தெரியவருகிறது.

1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்தில் முதற்தடவையாக யாழ் மாநகரசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகிவருகிறது.

மாநகரசபைத் தேர்தலில் கிடைக்கும் பெறுபேறுகளைக் கொண்டு வடமாகாணத்துக்கான ஏனைய தேர்தல்கள் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் 1998ஆம் ஆண்டே யாழ் மாநகரசபைக்கு இறுதியாகத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர்விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்று சரோஜினி யோகேஸ்வரன் முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் பின்னர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் முதல்வராக நியமிக்கப்பட்ட கே.சிவபாலன் யாழ்ப்பாணத்தில் புலிகளால் செய்யப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply