424 தனிநபர் தடைப்பட்டியலிலிருந்து சுதர்சன் உட்பட மூவரின் பெயர் நீக்கம்
புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் தடைசெய்யப்பட்ட 424 தனி நபர்களில் மூவரது பெயர்கள் தடை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். தகுதிவாய்ந்த அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரின் சிபாரிசுக்கமைய வெளிவிவகார அமைச்சரினால் இது தொடர்பில் 2014 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியுடைய 1874 / 31 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட 424 நபர்களில் மரணித்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட இருவரது மற்றும் தான் தொடர்பு இல்லை என்பதை உரிய முறையில் உறுதிப்படுத்திய ஒருவர் என்ற அடிப்படையிலேயே மூவரது பெயர்கள் தடை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புடன் தொடர்புடைய சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப் பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்றது.
புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கருதப்பட்ட 16 அமைப்புகளும் 424 நபர்களும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1373 என்ற பிரகடனத்திற்கமைய 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதியுடைய 1854 / 41 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புகளாகவும், நபர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த தடை பட்டியலில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் அமைப்புகளும் அடங்கியிருந்தன. பயங்கரவாதிகளுடன் தொடர்பு, வைத்திருந்தவர்கள் பற்றி சேகரிக்கப்பட்ட நீண்டகால தகவல்களின் பிரகாரம். ஐ. நா. பாதுகாப்பு சபையின் பிர கடனத்திற்கு அமைய அதன் தகுதிவாய்ந்த அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரின் சிபாரிசுக்கமைய வெளிவிவகார அமைச்சரினால் தடை பட்டியல் வெளியிடப்பட்டது.
எனினும் அந்த பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள அமைப்புகள் அல்லது நபர்கள் தமக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புகள் எதுவும் இல்லை என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் கடிதம் மூலம் உரிய முறையில் ஆவணங்களை தகுதிவாய்ந்த அதிகாரி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறித்த ஐ. நா. பிரகடனத்தில் குறிப்பிடப்பட் டுள்ளதுடன், அது தொடர்பில் தொடர்ச்சியாக தெளிவுபடுத்தியும் வந்தோம்.
இந்த அடிப்படையிலேயே பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இந்தியாவில் வசித்து வரும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த சுதர்சன் கைலாயநாதன், தனக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இல்லை என்று உரிய ஆதாரத்துடன் தகவல்களை சமர்ப்பித்தமையை அடுத்து அவரது பெயர் மேற்படி தடை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கருணாநிதி துரைரத்தினம் மற்றும் கிளிநொச்சி, வட்டக்கச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தனுஸ்கோடி பிரேமாணி என்ற இருவரும் மரணித்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, அவர்கள் இருவரது பெயர்களும் மேற்படி தடை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
பெயரிடப்பட்ட தடை பட்டியலானது இறுதியானதல்ல. எனவே அவ்வாறு பெயரிடப்பட்டவர்கள் தான் தொடர்பு இல்லை என்பதை உரிய முறையில் உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவர்களது பெயர்களையும் அந்த பட்டியலிலிருந்து நீக்கவும் எதிர்காலத்தில் அடையாளம் காணப்படும் ஒருவரது பெயரை உள்வாங்கவும் முடியும் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply