எத்தகைய தடைகள், அழுத்தங்கள் வந்தாலும் மக்களுக்கான எமது பயணத்தை நிறுத்தப் போவதில்லை : ஜனாதிபதி
மனித உரிமை தொடர்பில் எம்மீது குற்றம் சுமத்தும் மேற்குலக நாடுகள் அவர்களின் கடந்த கால வரலாறுகளை மறந்து செயற்படுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். எத்தகைய அழுத்தங்கள், தடைகள், நிபந்தனைகளை எதிர்கொள்ள நேரிடினும் நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப முன்னெடுத்துள்ள பயணத்தை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலிய மாவட்டத்தின் ரூபஹ சந்தானந்த வித்தியாலயத்தில் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி, இந்த பிரதேசத்துக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. ஊவா வெல்லஸ்ஸ புரட்சி இங்குதான் ஆரம்பமானது. “மோட்டால” மார் ஒன்றிணைந்து இங்கிருந்துதான் தமது புரட்சியை ஆரம்பித்தனர்.
இப்போது மனித உரிமை பற்றி பேசும் பல மேற்குலக நாடுகளின் தலைவர்கள் அவர்களின் கடந்த கால வரலாறுகளை மறந்து செயற்படுகின்றனர். அவர்கள் இப்போது எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்.
மனித உரிமை பற்றி பேசுவோர் அன்று எம் மூதாதையர்களைப் பிடித்து படுகொலை செய்தனர். பிரபாகரனுக்கு படுகொலையைப் பழக்கியவர்கள் அல்லது அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே.
இப்பிரதேசத்தில் மடுல்ல என்ற கிராமத்தில் 16 பேரை உயிருடன் குகைக்குள் போட்டு சீல் வைத்து மனிதாபிமானமற்ற படுகொலை செய்தது மேற்குலக நாட்டினரே. அவர்களே இப்போது எமக்கு மனித உரிமை பற்றி உபதேசிக்கின்றனர்.
இவர்களது வழிமுறையையே பிரபாகரன் பின்பற்றி செயற்பட்டார். நாம் அவ்வாறு செய்யவில்லை. இத்தகையோர் தான் எம் மீது விரல் நீட்டுகின்றனர்.
இந்த நாடு இன்று சுதந்திரமாக இயங்குகிறது. வடக்கு மக்கள் போன்றே தெற்கு மக்களும் சுதந்திரமாக வாழ்கின்றனர். கறுப்புக் கொடிகள் அசைந்த யுகம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரலாறுகளை நாம் மறந்துவிட முடியாது.
நாம் கல்வித்துறையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் நாட்டின் முதலாம் தர பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்ட போது எமது மாவட்டமான அம்பாந்தோட்டைக்கு ஒரு முதல் தர பாடசாலை மட்டுமே தரப்பட்டது.
அதைப் போன்றே இந்த பிரதேசங்களும் இருந்துள்ளன. கஷ்டப் பிரதேசம் என்பதால் இப்பகுதிக்கு ஆசிரியர்கள் வந்து தொழில் புரிய விரும்பவில்லை. இன்று எம்மால் அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதிப் பாடசாலைகளை தரமுயர்த்த முடிந்துள்ளது. இப்பிரதேசத்திற்கும் மஹிந்தோதய பாடசாலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விஞ்ஞானம் கணிதம், தொழில்நுட்பம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கணனி தொழில்நுட்பம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கணனி தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரை நாம் 2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது மூன்று வீதமாகவே கணனி அறிவு மக்களிடம் இருந்தது. தற்போது அது பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
எமது கல்வியறிவு 93 வீதத்துக்கு மேற்பட்டதாக இருந்தது. எனினும் கணனி தொழில்நுட்ப அறிவு 03 வீதமாகவே இருந்தது. இதனைக் கருத்திற் கொண்டே நாம் பாடசாலைகளில் கணனி கூடங்களை எற்படுத்தத் திட்டமிட்டோம். அது தற்போது பெரும் நன்மையளித்துள்ளது. தொழில்நுட்பம் தற்போது கிராமங்களுக்குள்ளே பிரவேசித்துள்ளது.
நாம் எமது காலத்தில் ஆரம்பித்த ‘நெனசல’ அறிவகம் செயற்திட்டத்தைப் பாராட்டி சர்வதேச விருது ஒன்று எமக்கு அண்மையில் கிடைக்கவுள்ளது. எமது செயற்திட்டம் உலகளாவிய கெளரவத்துக்கு உரித்தாகியுள்ளதுடன் அதனைக் கெளரவித்து விருதும் வழங்கப்படவுள்ளது பெருமையே, அந்தளவில் நாம் கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
1990 காலங்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த இப்பிரதேசம் இப்போது முன்னேற்றம் கண்டுள்ளது. மாணவர்கள் ஒரு இலக்குடன் செயற்பட வேண்டும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு முக்கியமாகும். உங்களால் அது முடியும், உழைப்பும் அர்ப்பணிப்புமே அதற்கு அவசியமாகிறது.
ஐந்தாம் நூற்றாண்டில் சீகிரி ஓவியங்களையும் ராஜதானிகளையும் பாரிய நீர்ப்பாசனக் குளங்களையும் நிர்மாணிக்க எமது முன்னோர்களுக்கு முடியுமானால் எம்மால் ஏன் முடியாது.
சேத்த வனாராமய, ருவன்சேய போன்றவற்றை நிர்மாணிக்க முடியுமானால் அந்த ஞானமும் அறிவும் எம்மிடமும் இருக்கின்றது. அதனை வெளியில் கொண்டுவர வேண்டும். விரல் இடுக்குக்குள் எமது மாணவர்களிடம் புதைந்துள்ள நுண்ணறிவும் ஞானமும் வெளிப்பட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைவது சுலபம்.
எம்மிடம் பலமுள்ளது அதன் மூலம் நாம் உலகை வெல்ல முடியும். பெற்றோரும் ஆசிரியரும் பெரியோர்களும் அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் எமது பிள்ளைகள் இலக்கை அடைவது உறுதி. இத்தகைய முன்னேற்றங்களை நாட்டில் ஏற்படுத்தி வருகையில் எமக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்ப டுகின்றன.
அலட்சியமும் இழிவும் அவதூறுகளும் எமது இலக்கை தடுத்து விடக்கூடாது. அதற்கூடாக எமது பயணத்தை நாம் தொடர்வது முக்கியம். இவை எதுவும் நமது இலக்கை இடைநிறுத்தக் கூடிய காரணமாக முடியாது. எத்தகைய நிந்தனைகளும் அவதூறுகளும் தடைகளும் எதிர்கொண்ட போதும் நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் பயணத்தையும் நாம் ஒருபோதும் நிறுத்தப்போவதுமில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் சி.பி. இரத்நாயக்கவின் 20 வருட அரசியல் வாழ்க்கை நிறைவு பெறுவதையொட்டி அந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சருக்கு ஜனாதிபதி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply