சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டிய இலங்கையுடன் நட்புறவுகளைப் பேணுவதில் இந்தியாவுக்கு பெருமை : வை.கே.சிங்ஹா
மூன்று தசாப்தகாலம் நிலவிய முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தையும், சுபீட்சத்தையும் நிலைநாட்டியிருக்கும் இலங்கையுடன் நட்புறவுகளைப் பேணுவது குறித்து இந்தியா பெருமையடைவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார். இரு நாட்டுக்கும் இடையிலான சமூக பொருளாதார, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் மென்மேலும் பலமடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் 68வது சுதந்திர தினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்தியர்கள் என கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தியாவின் புதிய பிரதமராக ஜனநாயக ரீதியில் தேர்வுசெய்யப்பட்ட நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சார்க் நாடுகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்த இந்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுக் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், நன்றிகளையும் தெரிவித்துள்ளோம். இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டிருந்ததாகவும் வை.கே.சிங்கா தனது உரையில் குறிப்பிட்டார்.
உலக நாடுகளில் இந்தியா முன்னெடுத்திருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூடுதலான அபிவிருத்தியை இலங்கையிலேயே முன்னெடுத்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.
வடபகுதிக்கான ரயில் பாதையமைக்கும் பணிகள் இவ்வருட இறுதியுடன் பூர்த்தியடைந்துவிடும். பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படவிருப்பதுடன், இவ்வருட இறுதிக்குள் காங்கேசன்துறை மற்றும் தலை மன்னார் வரையிலான ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துவிடும்.
அதேநேரம், இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 15 ஆயிரம் வீடுகள் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 26 ஆயிரம் வீடுகள் பூர்த்தி செய்யப்படவிருப்பதுடன், அடுத்த வருட இறுதிக்குள் 50 ஆயிரம் வீடுகளும் பூர்த்திசெய்யப்படவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் கிராமம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், வடக்கிலும் அவ்வாறானதொரு கிராமம் அமைக்கும் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், இடைநிறுத்தப் பட்டிருக்கும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தென்பகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்தவுடன் கதிர்காமத்திலிருந்து இந்தியாவின் புத்தகாயாவரை ஒரே டிக்கட்டிலேயே பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்ந்தும் பலமடைந்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் அதிகரித்துள்ள. இவ்வாறானதொரு நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் பலமடைந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply