தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை நியமனம்

தமிழ்நாடு மாநில பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தில்லியில் கட்சித் தலைவர் அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக ஆனதையடுத்து தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி ஆனந்ததின் புதல்வியான தமிழிசை சவுந்தரராஜன், மருத்துவம் பயின்றவர். 1999ஆம் ஆண்டிலிருந்து முழு நேர அரசியல்வாதியாக பாரதீய ஜனதாக் கட்சியில் செயல்பட்டுவருகிரார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணியின் செயலராக தன் அரசியல் வாழ்வைத் துவங்கிய தமிழிசை, பாஜக மாநில பொதுச்செயலர், துணைத் தலைவர் பதவிகளை ஏற்கனவே வகித்துள்ளார்.

நியமன அறிவிப்பு வெளியான பிறகு, மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மாநிலத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் கட்சித் தலைமையிடம் கொண்டுசெல்லவதுதான் தனது முக்கியப் பணியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராகப் பதவியேற்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தவிர, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கட்சியின் துணைத் தலைவராக உயர்த்தப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply