இலங்கை இராணுவத்தின் நான்காவது சர்வதேச பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்: 66 நாடுகள் பங்கேற்பு

இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள 4வது பாதுகாப்பு கருத்தரங்கு இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. “இலங்கை எழுச்சி பெறும் தேசமொன்றுக்கான சவால்கள்” ( Sri Lanka: Chellenges to a Rising Nation) என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்த சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளன. இவ்வாண்டு நடைபெறுகின்ற 2014 ஆம் ஆண்டிற்கான இந்த பாதுகாப்பு கருத்தரங்கில் 66 நாடுகளைச் சேர்ந்த 197 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 350 பாதுகாப்பு மற்றும் துறைசார் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வுள்ளமை விசேட அம்சமா கும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இவர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகள், முப்படைகளின் உயர் தர அதிகாரிகள் மற்றும் பேச்சாளர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் நிதி அமைச்சின் செயலாளர் டொக்டர் பி. பீ. ஜயசுந்தர பிரதான உரை நிகழ்த்தவுள்ளார்.

முன்னேற்றம், பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, பிராந்திய சவால்கள் மற்றும் உலகளாவிய சவால்கள் என்ற பல்வேறு தலைப்புக்களில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள பல அமர்வுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பேச்சாளர்கள் உரை நிகழ்த்தவுள்ளனர்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம், ஐ. நாவுக்கான இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் அமர்வுகளுக்கு தலைமை வகிக்கவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க. பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சர்வதேச உறவுகள் மற்றும் தந்துரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அசங்க அபயகுணசேகர, மேஜர் ஜெனரல் ஜி. வி. டீ. யு. பெரேரா, ரியர் அட்மிரல் டி. சி. குணவர்தன மற்றும் எயார் வைஸ் மார்ஷல் கே. வி. பி. ஜயம்கத்தி ஆகியோர் இலங்கையின் சார்பில் பேச்சாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, வெளிநாட்டு பேச்சாளர்களாக டாக்டர் டி. சுபா சந்திரன் (இந்தியா), டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி (இந்தியா), மரியம் சபி (ஆப்கானிஸ்தான்) ஆரிப் ஐயூப் (பாகிஸ்தான்), பேராசிரியர் பன்டார்டோ பண்டோரோ (இந்தோனேசியா), பெட்ரிக் கூஜெல் (ஐரோப்பிய நாடு) பேராசிரியர் ப்ளோரன்ஸ் டி. ஏ. எம். லோகா (தான்ஸானியா). டொக்டர் டாங் சேவ முன் (மலேசியா), டொக்டர் வாங் வேஹ்வா (சீனா) மற்றும் டொக்டர் வையோ லேய் ஹவே (சிங்கப்பூர்) ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இலங்கை பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்ததை தொடர்ந்து எமது நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு துறையினருக்கான கேள்வி அதிகரித்ததை அடுத்து நாம் பெற்ற அனுபவங்களை ஏனைய நாடுகளுடனும் பாதுகாப்புத் தரப்பினர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவிற்கமைய 2011 ஆம் ஆண்டு முதல் இந்த பாதுகாப்பு கருத்தரங்கு இலங்கையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply