நவாஸ் ஷெரீஃபுடன் இறுதி ஆட்டத்துக்குத் தயார்: இம்ரான்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடனான இறுதி ஆட்டத்துக்குத் தயாராக உள்ளேன் என்று அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் கூறினார். ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி லாகூரிலிருந்து அவரது கட்சியினருடன் தலைநகர் இஸ்லாமாபாதை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்டார். இஸ்லாமாபாதில் தொண்டர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசினார். அப்போது, “பிரதமர் பதவி விலகும்வரை தலைநகரை முற்றுகையிடுவோம். நவாஸ் ஷெரீஃபுடன் இறுதி ஆட்டத்துக்குத் தயாராக உள்ளேன்’ என்று இம்ரான் கான் எச்சரித்தார்.

தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் ஆகியோர் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ள பகுதி கூடுதல் பாதுகாப்பின் கீழ் வந்துள்ளது. சாலைகளின் குறுக்கே கன்டெய்னர் பெட்டிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்ரான் கட்சியினர் அந்தக் கன்டெய்னர்கள் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், “சிவப்பு பிராந்தியம்’ என அறியப்படும் முக்கிய கட்டடங்கள் அமைந்த பகுதியை நோக்கி பெருந்திரளாகச் சென்றனர்.

அதே வேளையில், பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் அவாமி தெஹ்ரிக் தலைவரும் மதகுருவுமான தஹிருல் காத்ரி, 48 மணி நேரத்துக்குள் பிரதமர் பதவி விலக வேண்டும் என கெடு விதித்திருக்கிறார்.

பிரதமர் பதவி விலகல், அனைத்து மாகாணப் பேரவைகள் கலைப்பு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் இப்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இம்ரான் கானும் காத்ரியும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், “அரசுக்கு எதிராக நடத்தப்படும் பேரணியைத் தடுக்க ராணுவம் அல்லது பிற அமைப்புகள் முயன்றால் நாட்டின் அரசியல் சூழலில் நிலையற்ற தன்மை உருவாகும்’ என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், ஒரு மனு மீது கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply