புலிகள் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை : டிஜிபி ராஜேந்திரன்
தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது போன்ற காரணங்களுக்காக,சீமான், நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தினரை ஆதரிப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
இந்த மாதம் 1ம் தேதியன்று திருப்பூர் நகரில் நாதியற்றவனா ஈழத்தமிழன் என்ற தலைப்பில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அப்போது அவர் தனது உரையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவை ‘சேலை கட்டிய முசோலினி’ என்று கூறியுள்ளார். மேலும் தனித்தமிழ் நாடு உருவாக வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் தூதரகம் டெல்லியில் அமைய வேண்டும் என்றும், அதற்காக மாணவர்கள் போராட வேண்டும் என்றும், அவர்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக தூண்டி விடும் வகையில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த கே.கணேஷ் என்பவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இபிகோ 153(பி)(1)(ஏ) சட்டப்பிரிவின் படியும், சட்ட விரோத நடவடிக்கை சட்ட பிரிவு 13(1)(பி)ன் படியும் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த பிப்ரவரி 26ம் தேதி திண்டுக்கல் நகரில் ஈழம் எரிகிறது என்ற தலைப்பில் பெரியார் திராவிட கழக கட்சியின் மாநில தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இந்திய அரசு தமிழர்களை மக்களாக நினைக்காது என்றும், எஜமான் பெற்றுக்கொடுக்காமல் நாமே எடுத்துக்கொள்கிற நிலைக்கு வருவது என்பது தான் முடிவாக இருக்கும் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளார்.
அவர் மீது திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனால் அவரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் கூடுதல் டிஜிபி ராஜேந்திரன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply