வரலாற்றுப் பெருமையும், ஆன்மீகச் சிறப்பும் கொண்ட நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுப் பெருமையும், ஆன்மீகச் சிறப்பும் கொண்டது நல்லையம்பதி. தமிழ் மன்னர்களது ஆட்சிக்காலத்தில் நல்லூர் இராசதானியாக விளங்கியது. நல்லூர் இராசதானியாக இருந்த காலத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கிய ஆலயமாகத் திகழ்ந்தது. சைவத்தையும், தமிழையும் போற்றிப் பாதுகாத்து வளர்த்த ஆறுமுகநாவலர் போன்ற அறிஞர் பெருமக்கள், கடையிற் சுவாமிகள் இவரைக் குருவாகக் கொண்ட செல்லப்பா சுவாமிகள், இவரது சீடரான ‘யோகர் சுவாமிகள் போன்றவர்கள் நல்லைக் கந்தனின் திருவருள் பெற்று நல்லூரிலேயே வாழ்ந்தவர்கள். இத்தகைய பெருமைக்குரிய ஞானபரம்பரையினருக்கும் நல்லையம்பதிக்கும் உள்ள தொடர்பு மேன்மையானது. நல்லூரில் நாவலர் மணி மண்டபம், சைவ ஆதீனமான நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் மணிமண்டபங்கள், இன்னும் பல மன்றங்கள் அன்னதான மண்டபங்கள் உட்பட பல சமய மன்றங்கள் நல்லூரின் பெருமைகளையும் சிறப்புக்களையும் அடியார்களுக்கு நினைவுபடுத்துவனவாக அமைந்துள்ளன.

ஆடி மாதம் பிறந்து விட்டால் நல்லைக் கந்தனின் மகோற்சவ நினைப்பு அடியார்கள் அனைவருக்கும் வந்து விடும். ஆடி அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஆறாம் நாள் சஷ்டித் திதியில் நல்லைக் கந்தனின் ஆண்டு மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் நடைபெற்று, கந்தப் பெருமானின் திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவு பெறும். அழகே உருவான அழகுக்கந்தனாக நல்லையம்பதியில் எழுந்தருளியிருந்து தன்னை விரும்பித் தொழும் அடியார்களுக்கு நல்லருள் புரிகின்றார். முருகப்பெருமான் இளமையுடன் இருப்பதால் குமரன் என்றும் அழகுக் கந்தனாகத் திகழ்வதால் அலங்காரக்கந்தன் என்றும் அழைக்கப்படுகின்றான். ”ஓம் முருகா’ என்ற அருட்கோபுரம் பல்லாயிரக்கணக்கான அடியார்களை வரவேற்கின்றது. ” கோபுரவாசலில் ஜனத்திரள் அலைமோதும், ஆலய உள்வீதிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, அவனது அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆறாத பக்தியினால் அடியார்கூட்டம் பெருமளவில் ஆலய வீதிகள் தோறும் வழிபடும் காட்சியைக் காணலாம். அடியார்கள் கோபுரவாசலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும், கற்பூர ஜோதியில் ஆறுமுகப் பெருமானைக் கண்டு வணங்கித் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்கின்றனர். அமைதியான அதிகாலை வேளையில் திருவிழாக்கள் தோறும் வெளிவீதிகள் தோறும் ஆண் அடியார்கள் முருகனுக்கு அரோகரா, வேல் வேல் வெற்றிவேல் என்றும் பக்திபூர்வமாக முருகப்பெருமானை வேண்டி உருண்டு வருகின்ற கண்கொள்ளாக் காட்சிகளை நல்லூரில் காணலாம்.

. நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கலியுக வரதனாம் முருகப்பெருமான் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் இருப்பது வெற்றி வேலாகும். தனித்துவமான அருட்சக்தி உடையது இந்த வேலானது. நல்லூரிலே ஈர்ப்புச் சக்தியாக விளங்கி எல்லா அடியார்களையும் தன்னிடம் இழுக்கின்றது. இதனால்தான் உற்சவ காலங்களில் மட்டுமல்லாது நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனைப் பாடிப்பரவிப் பணிந்து வழிபடுகின்றனர். எங்கு திரும்பினாலும் அடியார் கூட்டம். வேறு சிந்தனைகளின்றி இறை சிந்தனையோடு அடியார்கள் வழிபாடியற்றுவார்கள்.

நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பித்து விட்டால் நல்லூர்ப் பதியே புனித்தன்மை பெற்று விடும். விரத அனுட்டானங்களுடனும் பயபக்தியுடனும் பக்தர் கூட்டம் நல்லூரை நாடி வரும். உற்சவ காலங்களில் அகிலமெல்லாம் முருகனின் பேரொளி வீசத் தொடங்கி விடும். வீதிகள் தோறும் ஜனசமுத்திரமாகவே காட்சியளிக்கும். மகோற்சவ காலங்களில் நல்லூர் மட்டுமல்ல யாழ். குடாநாடே புனிதம் பெற்றுவிடும். தெய்வீகமான பக்திக் கோலத்துடன் காட்சி தருகின்ற முருகப்பெருமானின் சிறப்புரைகளை காணலாம். (01.08.2014) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் மஞ்சத்திருவிழா அருணகிரிநாதர் உற்சவம் கார்த்திகை உற்சவம் கைலாசவாகன உற்சவம் கஜவல்லி மகாவல்லி உற்சவம் வேல் விமான உற்சவம் தண்டாயுதபாணி உற்சவம் சப்பர உற்சவம் போன்ற சிறப்பான உற்சவங்கள் நடைபெற்று இன்று (24.08.2014) ஞாயிற்றுக்கிழமை தேர் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

இன்று இடம்பெறும் தேர் உற்சவத்தின் போது அடியார்கள் அதிகாலை வேளையிலேயே ஆலயத்தில் கூடி விடுவார்கள். யாழ். குடாநாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் அடியார்கள் அலை அலையாக வருவார்கள். ஆறுமுகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதரராக தேரில் வலம் வந்து அடியார்களுக்கு காட்சி கொடுக்கும் அற்புத அழகையும் அலங்காரத்தையும் காண்பதற்கு கண்கள் கோடி வேண்டும். அலங்காரக் காட்சியினை சொல்லினாலோ எழுத்தினாலோ கூறுவது முடியாது. அழகனின் ஆலயத்திற்கு நேரில் வந்து அலங்காரக் காட்சிகளைக் கண்களால் கண்டு அனுபவிக்க வேண்டும். வாருங்கள் வந்து தேரில் வலம் வந்து அருள் பாலிக்கும் முருகப் பெருமானின் அற்புதங்களைப் பாருங்கள். பஜனைக் கோஸ்டிகள் ஒருபுறம் தூக்குக்காவடிகள் ஒரு புறம் காவடிகள் ஒருபுறம் பெண்கள் கற்பூரச்சட்டிகள் ஏந்துதல் ஒருபுறம் அங்கப்பிரதட்சணம் ஒருபுறம் இப்படியாக அடியார்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதைக் காணலாம். அருள்மழை பொழியும் கந்த பெருமானின் அசையா மணிகள் எல்லாம் ஒன்றாக ஒலிக்க அடியார்களின் அரோகரா என்ற ஒலி வானைப்பிளக்க பஜனைக் கோஸ்டிகளின் பஜனை ஒலிகள் எல்லாம் சேர்ந்து காதைப் பிளக்க முருகப்பெருமான் தேரில் வீதியுலா வருகின்ற அழகான அற்புதமான அலங்காரக் காட்சிகளைக் காணலாம்.

அழகன் முருகனின் அருட்கடாட்சமும் தெய்வ சாந்நித்தியமும் ஆலயத்தின் அமைப்பும் ஆலயத்திலும் அதன் வீதிகள் சூழல் என்பனவற்றில் நிலவுகின்ற தூய்மையான தன்மை என்பன அலங்காரக் கந்தனின் சிறப்புக்கு அணி செய்வதாக உள்ளது. முக்கியமாக ஆலயத்தின் நித்திய பூஜைகள் நைமித்திய பூஜைகள் என்பன நேரந்தவறாமல் நடைபெறுவது என்பது ஒழுங்கு முறையாக அமைந்துள்ளது. இவையெல்லாம் முருகனின் அழகுக்கு அணி செய்வனவாக அமைந்துள்ளன.

சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் ஆறுமுகப்பெருமான் கஜவல்லி மகாவல்லி சமேதரராக எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்புரியும் காட்சியை கண்ணாரக் கண்டு தரிசனம் செய்ய வேண்டும். நல்லூர் கந்தனின் தேர் வடம்பிடித்தால் மிகப்பெரும் புண்ணியமாகும். வடம் பிடித்தவர்கள் முருகப்பெருமானின் திருவடியில் இடம் பிடித்தவர்கள். இதனால் அடியார்கள் தேரில் வடம் பிடிப்பதற்கு முந்திக் கொள்வர். நான்கு வீதிகளிலும் காணலாம் நாம் இருக்கப் பயமேன் என்று அபயமளிக்கும் முருகப்பெருமானை தேரில் வலம் வரும் முருகப்பெருமானை ஒருமுறையாவது கண்ணார கண்டு தொழ அடியார்கள் முந்திக் கொள்வதை வீதிகள் எங்ஙனும் காணலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply