ரூ.290 மில். பணமும் மென் பொருட்களும் பில்கேட்ஸ் நிறுவனத்தினால் அன்பளிப்பு
நெனசல நிகழ்ச்சித் திட்டத்திற்கு கிராமிய மக்களுக்கான மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்பத்திற்காக விருதினையளித்துள்ள பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் நிறுவனம் இலங்கையின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக 2 ஆயிரத்து 900 இலட்சம் ரூபா (290 மில்லியன்) பெறுமதியான நிதி மற்றும் மென் பொருள்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளதென தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.சர்வதேச ரீதியாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 110 நாடுகளிலிருந்து முன்வைக்கப்பட்ட கிராமிய மக்களுக்கான 199 செயற்திட்டங்களுள் இலங்கை முதலிடத்தை தட்டிக் கொண்டுள்ளமையானது எமக்கு உலகப் புகழை ஈட்டித்தந்துள்ளதென சுட்டிக் காட்டிய அமைச்சர் சியம்பலாபிட்டிய இந்தப் பெருமைகளுக்கு உரிமையாளர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களேயாவாரெனவும் தெரிவித்தார்.
தற்போது நாடுமுழுவதும் 797 ‘நெனசல’ நிலையங்கள் உள்ளன. இவ்வருட இறுதிக்குள் இந்நிலையங்களின் எண்ணிக்கையினை ஆயிரமாக அதிகரிக்க அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தகவல் தொலைத்தொடர்புகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘நெனசல’ நிகழ்ச்சித்திட்டம் 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று கதிர்காமத்திலுள்ள கிரிவெஹெர விகாரையினை மையமாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 04 சதவீதமாகவிருந்த இலங்கையின் கணனி அறிவு வீதம் தற்போது 50 சதவீதத்தையும் தாண்டியுள்ளதையும் அமைச்சர் தெரிவித்தார்.
பேராசிரியர் ஏப்பாசிங்கவின் வழிகாட்டலே ‘நெனசல’ நிகழ்ச்சித் திட்டம் வெற்றியடைய காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஏப்பாசிங்க தெரிவிக்கையில், சுனாமியினால் எமது தொலைத் தொடர்புகள் சீர்குலைத்திருந்த போதிலும் 2005 ஜனவரியில் ‘நெனசல’ திட்டம் ஆரம்பித்தேயாக வேண்டுமென்பதில் எமது ஜனாதிபதியவர்கள் அப்போது முதல் உறுதியாகவிருந்தாரெனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ண கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் தகவல் தொழில்நுட்பம் செல்வாக்கு செலுத்துகின்றது.
இப்போது கிராமிய மட்டத்தைச் சேர்ந்த 50 சதவீதமான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். 2016 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப அறிவு வீதத்தினை 75 சதவீதமாக அதிகரிப்பதே எமது இலக்காகும். இருப்பினும் துரித முன்னேற்றம் அடிப்படையில் அடுத்த வருடமே எமது இலக்கை அடைந்துவிட முடியுமென்ற நம்பிக்கை எமக்கு கிட்டியுள்ளது. மேலும் 2020 இல் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளிலும் ‘நெனசல’ நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பான (ஐ.சி.பீ.ஏ) பிரதம நிறைவேற்று அதிகாரியான ரொஷான் தேவபெரும உரையாற்றுகையில், ‘நெனசல’ நிலையங்களிலுள்ள கணனிகளுக்கு பதிலாக புதிய, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கணனிகளை விரைவில் மாற்அடு செய்ய தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply