100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க இந்தியா தீர்மானம்

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காகத் தமிழகத்தில் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் டி.பி.திவாரட்ண கூறினார்.

வன்னியிலுள்ள மக்களுக்கு எந்த வகையிலான பொருள்கள் தேவையொன இந்தியா தம்மிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட திவாரட்ண, வீட்டுக் கூரைவிரிப்புக்கள், சமைப்பதற்கான கருவிகள், உடுதுணிகள், தற்காலிக கூடாரங்கள் போன்ற பொருள்கள் அடங்கிய பட்டியலொன்று ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

“ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களோ அல்லது எந்தவொரு உள்ளூர், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த நிவாரணப் பொருள் கொடுக்கல் வாங்கலில் பங்கெடுக்கவில்லை. அரசாங்கத்துக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பப்படும்” என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் வாகனத் தொடரணிகளுடன், இந்திய அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பொருள்கள் அரசாங்க அதிபர்களின் பொறுப்புடன் வன்னிக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும், நிவாரணப் பொருள்களை விநியோகிப்பது பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடப்படும் எனவும் திவாரட்ண கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் 29 லொறிகளில் 438 மெற்றிக்தொன் உணவுப் பொருள்கள் வன்னிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply