அமெரிக்க பத்திரிகையாளரைக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.
அந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் என்ற நிருபரும் மாயமானார்.
இந்த நிலையில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் ‘யூடியூப்’ மற்றும் ‘அல் புர்கான் மீடியா’ ஆகிய இணைய தளங்களில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் நிருபர் ஜேம்ஸ் போலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட காட்சி இடம் பெற்றிருந்தது.
அந்த வீடியோவுக்கு ‘அமெரிக்காவுக்கு ஒரு தகவல்’ என பெயரிட்டுள்ளனர். அதில் ஆரஞ்ச் நிற உடையில் நிருபர் ஜேம்ஸ் போலோ கைதியாக இருக்கிறார். அவர் அருகே முகத்தை கருப்பு துணியால் மூடிய நிலையில் தீவிரவாதி நிற்கிறான்.
அதன் பின்னர் ஜேம்ஸ் போலே தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்து பேசுகிறார். பிறகு அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு பிணமாக சாய்கிறார்.
அதை தொடர்ந்து, ஆங்கிலத்தில் பேசிய அந்த தீவிரவாதி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்தான். ஈராக்கில் உங்களது (அமெரிக்கா) ராணுவம் குண்டுவீசி தாக்குகிறது. முஸ்லீம்கள் சாவுக்கு காரணமாக உள்ளது.
அங்கு நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும். முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும், பாதுகாப்பையும் மறுத்தால் உங்களது மக்கள் இதுபோன்று ரத்தம் சிந்துவார்கள் என்று அந்த தீவிரவாதி தெரிவித்திருந்தான்.
அவனது ஆங்கிலப்பேச்சு பாணி பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் பேசுவதைப் போல் இருந்ததால், கருப்பு நிற துணிக்கு உள்ளே இருந்த அந்த தீவிரவாதியின் முகத்தின் அளவையும், வடிவத்தையும் வைத்து கம்ப்யூட்டரின் உதவியுடன் அமெரிக்க தடயவியல் வல்லுனர்கள் ஒரு முகத்தை வடிவமைத்துள்ளனர்.
மீசையுடன் ஒன்று, மீசையில்லாமல் ஒன்று என இரண்டு புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அராபியர்களின் சாயலில் சதைப்பற்றில்லாத, சப்பை வடிவிலான அந்த முகம் காணப்படுகின்றது.
இதற்கிடையில், பிரிட்டிஷ் உளவுத்துறையினரும் அந்த தீவிரவாதியைப் பற்றி தங்கள் நாட்டில் துப்பறிந்து வருகின்றனர். ‘ஜிஹாதி ஜான்’ என்ற புணைப்பெயரை சூட்டி, ஜின் என்ற ஒரு ‘ராப்’ பாடலாசிரியர் உள்பட 3 பேரின் பழைய குற்ற வரலாற்று பின்னணி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply