வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படவே அரசு விரும்புகிறது : பசில் ராஜபக்ஷ 

வட மாகாண சபை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் வடக்கில் ஏற்கனவே முன்னெடுக் கப்பட்டு வந்த அபிவிருத்திப் பணிகளில் மந்தகதி ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றதென பொருளாதார அபிவிருத்திய மைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த மந்தகதியினை காரணம் காட்டி வட மாகாண சபை மீது குற்றச்சாட்டி னை நாம் முன்வைக்கவில்லை. மாறாக அவர்களுக்குள்ள ஆளுமையை ஊக்குவிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்கும் வகையில் அவர்களுடன் இணை ந்து செயற்படவே விரும்பு கின்றோமெனவும் அமைச்சர் பசில் கூறினார்.

வட மாகாண சபைக்கு வழங்கப்பட்டி ருக்கும் அதிகாரத்தினைக் கொண்டு மாகாண சபை உறுப்பினர்களால் அப்பகுதி வாழ் மக்களுக்காக இன்னமும் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் அவர்களோ மக்களின் அவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு விடயங்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். வட மாகாண சபைக்கு அவசியமான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் அவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

இதற்கான காரணம் அனுபவமின்மையா அல்லது அபிவிருத்தி தொடர்பில் அக்கறையில்லையா என்பது குறித்து எனக்கு புரியவில்லை. இருப்பினும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து கூறுவதால் அரசாங்கத்துடன் வட மாகாண சபைக்கு இருக்கும் இணக்கப்பாட்டை இழந்துவிட நான் விரும்பவில்லையெனவும் அமைச்சர் கூறினார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வட மாகாண சபை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லையென வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்குகையில் அமைச்சர் பசில், ஒத்துழைக்கவில்லையென நான் கூற வரவில்லை. இதுவரை காலமும் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படவில்லையென்றார்.

ஆரம்பம் முதலே வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட நாம் விரும்பிய போதும் துரதிர்ஷ்டவசமாக எம்மால் அது இயலாது போய்விட்டது. எம்முடன் இணைந்து செயற்படுமாறு அவர்களை பலவந்தப்படுத்த முடியாது. இருப்பினும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வின் போது வட மாகாண முதலமைச்சரை சந்தித்து உரையாடியுள்ளேன். இது குறித்து நல்லதொரு பதில் கிடைக்குமென நம்புகின்றேனெனவும் அமைச்சர் கூறினார்.

வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் வெவ்வேறு தரப்பினரும் அங்கு அபிவிருத்திப் பணிகள் மந்தகதியை அடைந்திருப்பதனை எனக்கு சுட்டிக்காட்டினார்கள்.

சத்தம் எழும்ப வேண்டுமாயின் ஒரு கையை மட்டும் தட்டுவது போதுமானதல்ல. இரண்டு கைகளையும் தட்ட வேண்டும். அதேபோலதான் வட மாகாண சபையும் மக்களுக்கு அத்தியாவசியமான தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தவறியுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் மக்களின் தேவைகளே மிகவும் அத்தியாவசியமானது.

வட மாகாண சபை விரும்புமாயின் ஒரு கையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அதேநேரம் மறு கையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியுமெனவும் அமைச்சர் கூறினார்.

வடக்கின் வசந்தம் வேலை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அநேகமான அபிவிருத்தித் திட்டங்கள் மந்த கதியிலேயே உள்ளன. ஏப்ரல் முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவையை ஆரம்பிப்பதாகவிருந்தது. எனினும் ஓகஸ்ட் மாதம் முடிவடையும் தறுவாயிலும் அதற்கான பணிகள் நிறைவேற்றப் படவில்லை.

திவிநெகும திட்டத்தின் கீழ் 75 சதவீத முருங்கைக்காய் விளைச்சலைப் பெற்ற பயிர் நிலங்களில் பயிர்ச் செய்கைகள் கைவிடப்பட்ட நிலையிலிருப்பதனை என்னால் பார்க்க முடிந்தது எனவும் அமைச்சர் கூறினார்.

இதனைத் தவிர, ரயில் தண்டவாளங்கள் அகற்றப்பட்ட வீதிகளிலிருந்து மக்கள் தமது வீடுகளுக்குச் செல்வதற்கான குறுக்கு வீதிகளை அமைத்துக்கொண்டுள்ளனர். அபிவிருத்திப் பணிகளுக்காக மண் ஏற்றிச் செல்லும் லொறிகளினால் தமது வீதிகள் சேதமடையக் கூடுமென்ற அச்சத்தில் மக்கள் அத்தகைய லொறிகள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலைமையே அங்கு உள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும். பிரச்சினைகளில் தலையிட்டு மக்களுக்கு நம்பிக்கையளிப்பதன் மூலம் பணிகளை துரிதப்படுத்தும் தலைமைத்துவத்தை அங்கு காண முடியவில்லையென்றும் அமைச்சர் பசில் தெரிவித்தார்.

வடக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தனியான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்குகையில்; வட மாகாண சபைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களே இவற்றை முன்னெடுக்க போதுமானதெனக் கூறினார்.

ஒன்றிரண்டு வைத்தியசாலைகளை தவிர்ந்த அனைத்து வைத்தியசாலைகள் 97 சதவீதமான பாடசாலைகள். மீன்பிடி, விவசாயம், கால்நடை, சுற்றுலாத்துறை என பல அதிகாரங்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் வட மாகாண சபை மக்களுக்காக பல சேவைகளை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வட மாகாண சபை தேர்தலுக்குப் பிறகு நீண்டகாலமாக ஏன் வடக்கிற்கு நீங்கள் விஜயம் செய்யவில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது, வட மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கம் அநாவசியமாக அதன் செயற்பாடுகளில் தலையிடுவது பொருத்தமானதல்லவென்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே நான் எவ்வித தலையீடுமின்றி ஒதுங்கியிருந்தேன் எனவும் அமைச்சர் பசில் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply