பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த தயக்கம் இல்லை நரேந்திர மோடி பேட்டி

5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். இதையொட்டி நேற்று அவர் டெல்லியில் ஜப்பான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியா–பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் இடையே கடந்த 25–ந் தேதி நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. (பேச்சுவார்த்தைக்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் ஆலோசனை நடத்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது)

அதற்கு பதில் அளித்து நரேந்திர மோடி கூறியதாவது:–

அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்வதையே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடன் அமைதியான நட்புறவையும், ஒத்துழைப்பையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நான் பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாக இருந்தது.

எந்த நாட்டுடனும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வன்முறை, தீவிரவாதம் இல்லாத இணக்கமான நல்ல சூழ்நிலை அமைய வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் போக்கு அதற்கு உகந்ததாக இல்லை. இந்த விஷயத்தில் அந்த நாட்டின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடங்கும் முன், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் ஆலோசனை நடத்தி அவர்களுடைய கருத்தை கேட்க முயன்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

என்றாலும், பாகிஸ்தானுடன் அமைதியையும், நட்புறவையும் பேண இந்தியா தொடர்ந்து முயற்சி செய்யும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அந்த நாட்டுடன் சிம்லா ஒப்பந்தத்தின்படியும், லாகூர் உடன்படிக்கையின்படியும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியாவுக்கு எந்த தயக்கமும் கிடையாது.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில், இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும், அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் பாகுபாடு கூடாது என்றும் கூறினார்.

தனது ஜப்பான் பயணத்தை முன்னிட்டு நரேந்திர மோடி ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தனது ஜப்பான் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply