உறுதிமொழி எதனையும் பிரதமர் மோடி வழங்கவில்லை முழுப் பூசணியை சோற்றில் மறைத்த TNA தூதுக்குழு

இந்தியாவிற்கு விஜயம் செய்து அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது சந்திப்பு தொடர்பாக இன்றுவரை ஊடகங்களுக்குத் தெரிவித்துவரும் கருத்துக்கள், பேட்டிகள் அனைத்துமே பொய்யானதும், கை கால் மூக்கு வைத்த கற்பனை கலந்ததுமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உண்மையாக மோடி தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் மூடி மறைக்கப்பட் டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துகள் அனைத்துமே அப்பட்டமான பொய். இந்தியா, இலங்கை தொடர்பாக எதனையுமே எதிர்மறையாகக் கூறவில்லை. எத்தகைய தீர்வு எட்டப்பட வேண்டுமானாலும் இலங்கை அரசாங்கத்துடன் பேசியே அது எட்டப்பட வேண்டும் என்பதே மோடியின் ஆணித்தரமான கருத்தாக இருந்தது.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் இலங்கை அரசாங்கம் தொடர்பாக குறை கூறவே இல்லை. அதிலும் அழுத்தம் கொடுப்பேன், அவர்களுக்கு உத்தரவிடுவேன் என அவர் கூறவே இல்லை.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வழிவகைகளை மேற்கொள்ளுங்கள் என்றே நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதனை மாற்றித் தமக்குச் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இதற்குச் சில தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஊதுகுழல்களாக இருந்து வருகின்றன என்றும் அமைச்சர் சம்பிக்க கூறினார். தமிழ்க் கூட்டமைப்பு எங்கு சென்றாலும் இறுதியில், இலங்கை அரசாங்கத்து டனேயே பேச்சு நடத்தி தீர்வு காணவேண்டும். இதனை மோடி தெளிவாகவே கூறியுள்ளார் எனவும் அமைச்சர் கூறினார்.

சந்திப்பு தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துவரும் ஊடகச் செய்திகள் குறித்து இந்தியத் தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை வேடம் இந்தியாவிற்கு நன்கு தெரிந்திருக்கும் எனவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் தெரிவித்தது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தம்மை இணைத்துச் செயற்பட முன்வர வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்து வரும் சேவைகளை தடுக்காதிருக்க வேண்டும். அரசாங்கம் தமிழ் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களுமே ஏற்றுக் கொள்ளும் வகையில் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கும் எனவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply