ஆசிரியர் தினம்: “பிரதமரின் உரையைக் கேட்க பள்ளி வர வேண்டிய கட்டாயம் இல்லை”

இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தேசிய ஆசிரியர் தினத்துக்கான பிரதமரின் சிறப்பு உரையின் நேரடி காணொளி நடைபெறும் சமயத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் திங்களன்று விளக்கம் அளித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதியன்று பிரதமர் மோடியின் உரை நேரடியாக நாடுமுழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகள் அனைத்திலும் காணொளியாக திரையிடப்படும் என்று

அன்று மதியம் 3 மணிமுதல் 5 மணிவரை இந்த ஒளிபரப்புக்கான நேரமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரச்செய்வதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வந்த சூழலில் மத்திய மனிதவளத்துறையின் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டு, நாடு முழுவதும் இருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் அனைத்திலும் அன்று பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் சிறப்புரையை செயற்கைக்கோள் உதவியுடன் நேரடி காணொளியாக திரையிடும்படி கூறப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகளாக, மின்தடை ஏற்படும்போது அதனை சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் போன்ற உபகரணங்களை தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் அடங்கும்.

குறிப்பாக பிரதமரின் உரை நிகழ்த்தப்படும் நேரம் என்று மாலை 3 முதல் 5 மணி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவளத்துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள முக்கிய எதிரக்கட்சிகள் மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இத்தகைய அறிவிப்புகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்தே இந்த நேரத்தில் கட்டாய வருகைப்பதிவு அவசியம் இல்லை என்கிற அறிவிப்பும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்ற சர்ச்சை

ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆசிரியர் தினத்தை நாடுமுழுவதும் “குரு உத்சவ்” என்கிற ஒரே பெயரில் அழைக்கக்கூறி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கும் பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர். அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் ஒரே அளவிலான முக்கியத்துவம் கொடுக்கக் கோரியும் அவர்கள் போராடி வருகின்றார்கள்.

இந்தியாவில் மோடி தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு இது போன்ற அறிவிப்புகள் அவ்வபோது வெளியாவதும், அதற்கு எதிர்ப்புகள் வெளியிடப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

சமீபத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகள் அனைத்திலும் ‘சம்ஸ்கிருத வாரம்’ கடைப்பிடிக்கும்படி மத்திய அரசு அந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது.

அப்போதும் அதற்கு இதே போன்ற எதிர்ப்பும் விமர்சனங்களும் உருவாயின. தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோர், தொடர்ந்து மத்திய அரசிடம் மாநில பிராந்திய மொழிகளுக்கும், மாநில கலாச்சாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply