சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டும்
இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்பவே விக்கினேஸ்வரன் வட மாகாணத்துக்கு முதலமைச்சராக இருக்கின்றார். எனவே அவர் அரசியலமைப்புக்கு ஏற்பவே செயற்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.வட மாகாண சபை முதலமைச்சராக இருக்கும் சி.வி. விக்கினேஸ்வரன் ஓய்வுபெற்ற நீதியரசர். எனவே சட்டம் பற்றியும் அரசியலமைப்பை பின்பற்றவேண்டிய தேவை குறித்தும் அவருக்கு நன்றாக தெரியும் என்றும் தினேஷ் குணவர்த்தன கூறினார்.
வட மாகாண முதலமைச்சரை இந்தியா அழைத்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பிலும் கூட்டமைப்பை இந்தியா அழைத்து பேசியமை தொடர்பில் அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளமை குறித்தும் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
நாட்டில் உள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் முதலமைச்சர்கள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசியலமைப்பின் கீழேயே வருகின்றனர். முதலமைச்சர்களாக பதவிவகிக்கின்ற அனைவரும் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்படவேண்டும். எதிர்க்கட்சியின் சார்பில் ஒரு மாகாணத்தில் முதலமைச்சராக ஒருவர் இருந்தாலும் அவர் அரசியலமைப்புக்கு உட்பட்டே செயற்படவேண்டும். அரசியலமைப்பை மீறி யாரும் செயற்பட முடியாது. அதுமட்டுமன்றி நிதி மற்றும் நிர்வாக விடயங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இடம்பெறவேண்டும்.
இந்நிலையில் அமைச்சர் ஒருவரோ அல்லது பிரதியமைச்சர் ஒருவரோ மாகாண முதலமைச்சரோ வெளிநாடு செல்லவேண்டுமாயின் அது குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டும். இது சம்பிரதாயமாகும். இவ்வாறு அறிவித்துவிட்டு சென்றால்தான் தூதரக மட்டங்களில் உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
அந்தவகையில் இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அந்நாட்டுக்கு செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும். இந்த சம்பிரதாயத்தை அவர் கடைபிடிக்கவேண்டும். வட மாகாண சபை முதலமைச்சராக இருக்கும் சி.வி. விக்கினேஸ்வரன் ஓய்வுபெற்ற நீதியரசர். எனவே சட்டம் பற்றியும் அரசியலமைப்பை பின்பற்றவேண்டிய தேவை குறித்தும் அவருக்கு நன்றாக தெரியும் என்று நம்புகின்றோம்.
கூட்டமைப்பு இந்தியா விஜயம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் அரசாங்கத்துக்கு தோல்வி என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த விடயத்தை வெற்றி தோல்வி என்ற வகையில் நாங்கள் பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் அரசாங்கம் அலட்டிக்கொள்ளவுமில்லை.
காரணம் அவ்வப்போது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கூட்டமைப்பு பொய்களை கூறிவரும் என்பது எம் அனைவருக்கும் தெரியும். எனவே இது தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை என்றார்.
தோல்வியல்ல
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இந்தியாவின் சந்திப்பு தொடர்பில் அரசாங்கம் வெட்கப்படவேணடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன , ”அரசா்ஙகம் வெட்கப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு தமிழ்த் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து சந்திப்புக்களை நடத்தியிருந்தார்கள். எனவே இது அலட்டிக்கொள்ளவேண்டிய விடயமல்ல. மற்றும் இந்த விடயத்தில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply