முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள் முஸ்லிம் நாடுகளும் எமது நேச நாடுகளே

முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் எமது நேசநாடுகளே! நான் உங்களை நம்புகிறேன், நீங்களும் என்னை முழுமையாக நம்பலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் தெரிவித்தார். மொனராகலை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்த ஜனாதிபதி, அனைத்து மக்களும் எமது சகோதரர்களே சகலரும் சம உரிமையோடும் சுய கெளரவத்தோடும் சம அந்தஸ்தோடும் வாழ்வதே எமது விருப்பம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னர் காலந்தொட்டு எமக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு தொடர்கிறது. இந்த உறவை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி; தவறான வழியில் செல்லவேண்டாம், பொய்ப்பிரசாரங்களை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பொன்று மொனராகலை நகரில் நடைபெற்றது.

அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சுமேதா ஜயசேன பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், மாத்தளை மாநகர மேயர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

மொனராகலை வாழ் முஸ்லிம் மக்களை நேரடியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் எனது சகோதரர்கள். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் எமது சகோதர மக்களே. இதை எவரும் மறுக்க முடியாது.

எமது உறவை இல்லாதொழிக்க சில மோசமான சக்திகள் முயற்சிக்கின்றன. எனினும் நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை.

நீங்கள் ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம். பயம்கொள்ளவும் வேண்டாம். நான் உங்களின் சகோதரன். நான் உங்கள் நண்பன். சொந்தக்காரன்! நான் உங்களைப் பாதுகாப்பேன். அது எனது கடமை.

நீங்கள் என்னை நம்பவும். நானும் உங்களை நம்புகிறேன். தவறான வழியில் செல்ல வேண்டாம். பொய்ப்பிரசாரங்களை நம்பவேண்டாம். நாம் எல்லோரும் ஒன்று படுவோம்.

வானெலியில் ஒரு நாளில் ஐந்து தடவைகள் ‘பாங்கு’ சொல்ல நாமே வழிவகுத்தோம். பல வருடகாலம் பின்தங்கிய அபிவிருத்திப் பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். எதிர்காலத்திலும் மென்மேலும் செய்வோம்.

மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை முஸ்லிம் பாடசாலைகளிலும் ஏற்படுத்தி வருகிறோம். பிள்ளைகள் தான் உங்கள் செல்வம் நாட்டின் செல்வம்.

பலஸ்தீன மக்களுக்காக நாம் ஆதரவளித்துள்ளோம். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் எமது நேச நாடுகளே.

சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவையே இஸ்லாமிய மதத்தின் அத்திவாரம். இந்த நாட்டில் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும். அனைத்து மக்களும் சம உரிமையோடும் சுய கெளரவத்தோடும் வாழவேண்டும். அதுவே எமது விருப்பம்.

நாடும் உங்கள் பிள்ளைகளும் முன்னேற வேண்டும். உங்கள் பிரதேசம் முன்னேறவேண்டும். உங்கள் வாழ்விலும் முன்னேற்றம்வேண்டும். அதுவே முக்கியம்.

வெற்றிலைச் சின்னத்தை மறக்கவேண்டாம் வெற்றிலையின் வெற்றி உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளினதும் வெற்றி. உங்கள் எதிர்காலத்தின் வெற்றி. வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply