ஈராக்கில் ஐ.எஸ்.படைகளிடம் இருந்து மீட்ட நகரில் 35 பிரேதங்கள் கண்டெடுப்பு

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இவர்கள் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.

இதற்கிடையில், ஈராக்கில் அமெரிக்க விமானப்படையின் உதவியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்திய குர்தீஷ் படைகள் கடந்த 3 மாதங்களாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமிருந்த அமெர்லி நகரை கைப்பற்றின. இதனையடுத்து, திங்கட்கிழமை நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலில் சுலைமான் பெக் என்ற நகரமும் குர்தீஷ் படைகள் வசமானது.

அந்நகரின் நுழைவுவாயிலில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொன்று போட்ட 35 பிரேதங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. அவற்றை பிரேத பரிசோதனைக்காக கிர்குக் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply