மும்பை வான்வெளிக்குள் ஊடுருவிய மர்ம விமானம்: தீவிரவாதிகள் கைவரிசையா?

அபுதாபியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தா நோக்கி ‘எதிஹாட்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்றுக் கொண்டிருந்தது. மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் வான்வெளிக்கு உட்பட்ட எல்லையில் அந்த விமானம் இன்று பறந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு விமானம் அப்பகுதியில் வட்டமிட்டுக் கொண்டிருந்ததை கண்ட  எதிஹாட் விமானி இது தொடர்பாக தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனடியாக, உஷார் அடைந்த அதிகாரிகள், இது தொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உஷார்படுத்தியுள்ளனர். அனுமதியின்றி அப்பகுதியில் பறந்தது எந்த நாட்டு விமானம்? எந்த வகை விமானம்? என்பது தொடர்பாக வெளிப்படையான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மும்பை வான்வெளிக்குள் ஊடுருவியது தீவிரவாதிகளின் குட்டி ரக விமானமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கடந்த 17-12-1995 அன்று இதேபோல் இந்திய வான்வெளிக்குள் அனுமதியின்றி ஊடுருவிய லத்வியா நாட்டு விமானம் ஒன்று, மேற்கு வங்காளத்தில் புர்லியா மாவட்டத்தின் பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் வீசிவிட்டு தப்பிச் சென்றது.

சில தினங்களுக்கு பின்னர், மீண்டும் இதே நோக்கத்தில் அந்த விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த போது, இந்தியப் போர் விமானத்தால் வழிமறிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆயுத பறிமாற்றத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்ட டென்மார்க்கை சேர்ந்த நபரான கிம் டாவி என்பவன் இன்னும் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மும்பை வான்வெளியில் ஊடுருவிய விமானமும் இதுபோன்ற தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கக் கூடுமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply