சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் முகாம்களின் மீது விமானப்படைகள் தாக்குதல்- 53 பேர் பலி

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இவர்கள் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் ரக்கா நகரின் மீது நேற்று சிரியா அரசின் விமானப்படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

எனினும், கொல்லப்பட்டவர்களில் 3 குழந்தைகள், 5 பெண்கள் என 31 பேர் அப்பாவி பொதுமக்கள் என அங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் ரமி அப்தெல் றஹ்மான் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply