இலங்கையில் ஜப்பானியப் பிரதமருக்கு கோலாகல வரவேற்பு நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்து
ஜப்பானிய பிரதமரின் இலங்கை விஜயமானது இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளுக்கு மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது என இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இரு தரப்புப் பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளது. நேற்று இலங்கை வந்தளடைந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேக்கு அமோக வரவேற்களிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜப்பானியப் பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் வர்த்தக உறவுகள், நல்லிணக்கம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்கள், விவசாய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட குழுவினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார். ஜப்பானின் கடனுதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி பயணிகள் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானியப் பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பல்வேறு விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவது தொடர்பில் இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தியிருந்தனர்.
கடல்சார் நாடுகள் என்ற ரீதியில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திரம் தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கை ஜப்பான் பேச்சுவார்த்தை யொன்றை நடத்துவதற்கும் இப்பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
துறைமுகம் மற்றும் துறைமுக அபிவிருத்தி, கடல்சார் கல்வி தொடர்பாக ஜப்பானின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இச்சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்ததாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையையே மக்கள் விரும்புவதால் இலங்கையில் நிலையான சமாதானத்துக்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தியிருந்தனர்.
வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தேசிய செயற்றிட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தைகள் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டி யிருந்தார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் சமூக பயிற்சித் திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு மாத்திரமன்றி கிராம மட்டங்களில் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் வழங்கிவரும் உதவிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி வருவதை ஜப்பானியப் பிரதமர் வரவேற்றிருந்தார்.
இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு ஏற்படுத்தப்பட்டு சுமார் 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி வழங்கும் என்ற உறுதிமொழியையும் ஜப்பானியப் பிரதமர், ஜனாதிபதியிடம் வழங்கியிருந்தார்.
ஜப்பானின் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் தொடர்பில் இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், இலங்கைக்கு வரும் ஜப்பானியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்தும் கலந்து ரையாடப்பட்டிருந்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் அரங்கு அமைப்பதற்கு ஜப்பான் உதவிவழங்க முன்வந்தமையை ஜனாதிபதி வரவேற்றிருந்தார்.
எரிசக்தி தொழில்நுட்ப ஒத்துழைப்பு, விவசாயத் துறையிலான ஒத்துழைப்பு, விஞ்ஞானம் மற்றும் புத்தாக்கம் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியிருந்ததுடன், ஜப்பானிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் இலங்கை வந்திருக்கும் நிலையில் இருநாட்டு வர்த்தகப் பேரவையொன்றை நடத்துவது இருநாட்டு வர்த்தக உறவுகளுக்கு மேலும் பலம்சேர்க்கும் என்றும் சுட்டிக்காட் டப்பட்டது.
இலங்கையில் ஜப்பானின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையா டப்பட்டிருந்தது.
இலங்கையை ஆசியாவின் கேந்திர நிலையமாக மாற்றும் தனது இலக்குக் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஜப்பானியப் பிரதமருக்கு விளக்கிக் கூறியிருந்தார்.
இந்த முயற்சிக்கு ஜப்பான் சாதகமான ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் அந்நாட்டுப் பிரதமர் உறுதிமொழி வழங்கியிருந்தார்.
பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை கண்டிப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்திருந்தனர். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சர்வதேச நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம். இது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்தின் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்திருப்பதாக ஜப் பானியப் பிரதமர் தெரிவித்திருப்பதுடன், இலங்கை விஜயத்தின் போது ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்ட மனப்பூர்வமான வர வேற்பு மற்றும் உபசரிப்பு திருப்தி கரமாக இருந்தது என்றும் தெரிவித் துள்ளார்.
ஜப்பானியப் பிரதமர் தலைமையிலான ஜப்பானின் உயர்மட்டக் குழுவினர் நேற்று பாராளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அவர்களுக்கு அங்கு விசேட வரவேற்பும் வழங்கப் பட்டிருந்தது.
புவித்துறை தொலைக்காட்சி ஒளிபரப்புச் செயற்திட்டத்தின் எண்மியப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தம் உட்பட நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply