பரிசுத்த பாப்பரசர் தலைமையில் காலிமுகத்திடலில் திருப்பலி பூஜை
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பாப்பரசர் பிரான்சிஸை கட்சி, இன, மத, மொழி பேதங்களின்றி எமக்கே உரிய நட்புறவையும், உபசார பண்பையும் வெளிப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்து வரவேற்று சர்வதேச சமூகத்துக்கு எமது தனித்துவத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்றுத் தெரிவித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் தமது விஜயத்தின் போது காலிமுகத்திடலில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கும் ஆராதனை நிகழ்வில் பங்கேற்க இருப்பதோடு மடு மாதா தேவாலயத்தில் செப வழிபாட்டிலும் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயம் தொடர்பான முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது பாப்பரசரின் 2015 இலங்கை விஜயம் தொடர்பான இலட்சினை வெளியிடப்பட்டதோடுந்ந்ந்.பொபெfரன்cஇச்ச்ரிலன்க.cஒம் என்ற புதிய இணையத்தளமும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டதாவது,
2013 ஆம் ஆண்டு புதிய பாப்பரசராக நியமிக்கப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸை வாழ்த்துவதற்காக அவரை சந்தித்தபோது இலங்கை வருமாறு முதன் முதலில் அழைப்பு விடுத்தேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் எழுத்து மூலம் பாப்பரசருக்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி 2015 ஜனவரி 13 முதல் 15 வரை அவர் இலங்கைக்கு வருகை தருகிறார்.
13 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு அங்கு உத்தியோகபூர்வ வரவேற்பு உபசாரம் வழங்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து திறந்த வாகனத்தில் அவர் கொழும்பு வரை ஊர்வலமாக அழைத்துவரப்படுகிறார். வீதியின் இருமருங்கிலும் இருந்து மக்கள் அவரை வரவேற்கவுள்ளனர். வத்திக்கான் தூதரகத்திற்கு சென்று ஓய்வு எடுக்க உள்ள பாப்பரசர் பேராயர் இல்லத்தில் இலங்கை ஆயர்களை சந்திக்கிறார். மாலை 4.45 மணிக்கு பாப்பரசருக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.
இதன்போது விசேட முத்திரையொன்றும் ஜனாதிபதியினால் வெளியிட்டு வைக்கப்படும். அதனைத் தொடந்து பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிக்குமார், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்களை சந்திக்கிறார்.
மறுநாள் (14 ஆம் திகதி) காலை 7.30 மணிக்கு திறந்த வாகனத்தில் காலிமுகத்திடலில் மக்கள் மத்தியில் அவர் பயணிப்பார். இதன்போது அவர் திருப்பலி ஒப்புக்கொடுப்பார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்விற்கு சகல கத்தோலிக்க மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.
இதற்காக விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும். இந்த பிரார்த்தனை நிகழ்வின்போது கத்தோலிகக திருச்சபை மேம்பாட்டுக்கு தம்மை அர்ப்பணித்த அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் புனிதராக உயர்த்தப்படுவார் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்த இலங்கையர் ஒருவர் முதற்தடவையாக புனிதராக அறிவிக்கப்பட இருக்கிறார்.
பிற்பகல் 2 மணிக்கு விமான மூலம் மடுமாதா தேவாலயத்துக்கு செல்ல இருக்கும் பாப்பரசர் பிரான்சிஸ் ஒரு மணிநேரம் தங்கியிருந்து செப வழிபாட்டில் ஈடுபட்டு திவ்ய நற்கருணை ஆசிர்வாதம் மேற்கொள்வார். அன்று மாலையே கொழும்பு திரும்பும் அவர் 15 ஆம் திகதி காலை பிலிபீன்ஸ் நோக்கி பயணமாவார்.
இலங்கைக்கு இதுவரை 2 பாப்பரசர்கள் வருகை தந்துள்ளார்கள். 1970 டிசம்பரில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பாப்பரசர் திருப்பலி ஒப்புக்கொண்டு ஆசிர்வதித்தார். அடுத்து 1995ல் வந்த பாப்பரசர் ஒருநாள் தங்கியிருந்தார்.
மூன்றாவதாக வரும் பாப்பரசர் பிரான்சிஸ் மக்கள் மத்தியில் சென்று உயர்ந்த பணியாற்றி வருகிறார் அவர். இங்கு வருவது எமக்குக் கிடைத்த பெரும் கெளரவமாகும். உயர்ந்த வரலாறும் கலாசார பாரம்பரியமும் உள்ள நாட்டு மக்கள் என்ற வகையில் பேதங்களை ஒதுக்கி சந்தர்ப்பவாதத்திற்கு இடமளிக்காது அவரை ஒன்றிணைந்து வரவேற்போம்.
அவர் குண்டு துளைக்காத வாகனத்திலன்றி சாதாரண வாகனத்திலே மக்கள் மத்தியில் பயணிப்பார் என்றார்.
பாப்பரசரின் வருகையின்போது தேர்தல நடைபெற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து வினவப்பட்டதற்கு பதிலளித்த அவர்,
தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் பாப்பரசர் இங்கு வருவது உகந்ததல்ல. இது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளோம்.
அரசாங்கம்தான் திகதிகளை முடிவு செய்யவேண்டும். எமது நிலைப்பாட்டை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். பாப்பரசரின் வருகையை வைத்து ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ அரசியல் லாபம் பெறும் நிலை ஏற்படக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவே அவரின் வருகை இருக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் காலி மறை மாவட்ட ஆயர் வன. ரேமன் விக்ரமசிங்க, கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் இமானுவல் பெர்ணாந்து, வத்திக்கான் தூதரக பொறுப்பதிகாரி அருட் தந்தை ரொனால்டோ குசிகஸ் ஊடகப் பணிப்பாளர் அருட் தந்தை சிரில் காமினி பெர்ணாந்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply