தமிழக அரசை விமர்சிக்கும் சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு மற்றும் ஈழம் வாழ் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து மிகச்சரியான போற்றுதலுக்குரிய நகர்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் தமிழக முதல்–அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசை, தீவிரவாதிகளின் நண்பன் என்று சுப்பிரமணியசாமி விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் வாழ்வுரிமைகளுக்காக அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர். காவிரி நீர், முல்லை பெரியாறு பிரச்சினைகளில் வெற்றி கண்டதுடன் மீனவர்கள் பிரச்சினை, கச்சத்தீவு மீட்பு ஆகியவற்றில் மிக மிக உறுதியான நிலைப்பாட்டுடன் தொடர்ந்தும் அவர் போராடி வருகிறார்.
தமிழக மீனவர்களை சிங்கள பேரினவாதிகளிடம் காட்டிக் கொடுத்த சுப்பிரமணியசாமி மீது ஒட்டுமொத்த தமிழ்நாடே கடும் கோபத்தில் இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இலங்கையுடன் நட்பு பாராட்டி கொண்டு தமிழ்நாட்டின் சட்டவிரோதியாக மாறிவிட்ட சுப்பிரமணியசாமி தமிழகத்திலே நுழையவே கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், படைப்பாளிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 150–க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பும் தடையும் விதித்துள்ளது.
தமிழ்நாடு அரசையும், தமிழக முதல்வரையும் உலகத் தமிழர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் சுப்பிரமணியசாமி டெல்லியில் பதுங்கிக் கொண்டு செயல்படலாம் என நினைத்தால் அது இனியும் நடக்காது.
தமிழ்நாட்டின் சட்ட விரோதியான சுப்பிரமணியசாமியை தமிழ்நாடு அரசு உடனே கைது செய்து சிறையில் அடைப்பது தான் சரியான பதிலடியாக இருக்கும். ஆகையால் தமிழினத் துரோகி சுப்பிரமணியசாமியை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply