கிழக்கு மக்களின் ஜனநாயகப் பாதையில் ஒரு மைல்கல் – ஆயுத ஒப்படைப்பு
மார்ச் 07 ம் திகதியன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது இராணுப்பிரிவை முற்றாகக் கலைத்துள்ளனர். அவர்களது ஆயுதங்கள் அனைத்தம் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வன்முறைகளை வரவேற்காத துப்பாக்கிகளுக்கு துணைபோகாத அனைவருக்கும் இந்த நிகழ்வானது அளவற்ற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகின்றது.
2004 ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பாசிச அமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உருவான போது “தமிழீழ பெருங்கதையாடலுக்கெதிரான மாபெரும் பிளவு” என்று அன்று அதை நாங்கள் பகிரங்கமாக ஆதரித்தோம்.
இலங்கையில் ஜனநாயக மீட்சி ஏற்படுவதற்கும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் பாசிசப் புலிகளின் தோல்வியே முன்நிபந்தனையாகும் என்பதே எமது மாறாத நிலைப்பாடாகும். அந்த தோல்வியை தொடக்கி வைத்த காரணியாக ரி.எம்.வி.பி. யின் உருவாக்கத்தை நாம் அடையாளம் கண்டோம். அத்தோடு கிழக்கிலங்கை மக்களின் சுயநிர்ணயத்திற்கான ஒரு அரசியற் போராட்டத்தையும் ரி.எம்.வி.பி. முன்வைத்தது. பாசிசத்திற்கு எதிரான போராட்டம், கிழக்கு மக்களின் சுயநிர்ணயம் என்கின்ற எமது முன்னணியின் அடிப்படை நோக்கங்களுடன் ரி.எம்.வி.பி. நோக்கங்களும் ஒரே பாதையில் பயணித்தன. இதன்காரணமாக களத்தில் நின்று போராடிய அந்த அமைப்பிற்கு ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் எமது கருத்தியல் ரீதியான ஆதரவை வழங்க முன்வந்தோம்.
ஆனால் எமது முன்னணியின் நிலைப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிட்டது. எதிர்க்கருத்துகள் என்பது விமர்சனங்களாக அன்றி காழ்ப்புகளை கொட்டித் தீர்ப்பனவாகவும் சேறு ப+சல்களாகவும் மட்டும் அல்ல கொலை முயற்சிகளாகவும் கூட விஸ்வரூபம் எடுத்தன. பாசிசப் புலிகளுக்கு நிகராக ஜனநாயக சக்திகள் என்று தம்மை சொல்லிக்கொள்பவர்கள் கூட எம்மை அரசியலில் இருந்து ஓரம்கட்ட பகிரதப்பிரயத்தனம் பண்ணினர். ஆனாலும் நாம் சோர்ந்துவிடவில்லை. கிழக்கில் ஜனநாயகத்தை வலுவாக்குவதற்கான எமது முயற்சிகளில் நாம் உயிரையும் துச்சமென மதித்து நாம் களத்திலும் இறங்கி செயற்பட்டோம். மட்டக்களப்பில் உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதன் நிலமைகளை இன்னும் மோசமாக்கும் என்று பலர் ஆருடம் கூறினர். ஆனால் நாம் அதனை “அரசியல் தலைமைத்துவமே ஜனநாயக மீட்சியை வலுவாக்கும்” என்று ஊக்கப்படுத்தினோம். பலமாக ஆதரித்தோம்.
சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் சுதந்திரமான தேர்தல்கள் கிழக்கில் நடந்ததாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பான “போப்ரல்” நற்சான்றிதழ் வழங்கும் அளவிற்கு உளசுத்தியுடன் தேர்தலை நீதியாக முகம் கொடுக்க ரி.எம்.வி.பி. க்கு உத்துசக்தியாக செயற்பட்டோம். இருதேர்தல்கள் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட்டதின் ஊடாக ரி.எம்.வி.பி. கட்சியானது தனது ஜனநாயக நுழைவை பகிரங்கமாக உறுதிப்படுத்தியது. அத்தோடு கிழக்கின் தனித்துவத்தை வென்றெடுத்து அங்கு ஒரு அரசியல் தலைமைத்துவத்தை ஜனநாயக ரீதியாக நிறுவுவதிலும் ரி.எம்.வி.பி. வெற்றி கண்டது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாசிசத்தின் பிடியிலும் ஆயுதக் கலாச்சாரத்தின் நெருக்குவாரத்திலும் உழல நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு மண்ணில் ஜனநாயகத்தை மீள நிறுவவது என்பது ஒரு நீண்டகாலப் போராட்டமாகும். கிழக்கில் ஜனநாயகச் சூழலை ஏற்படுத்துவது என்பதில் நாம் பொறுமையோடும், அவதானத்தோடும் செயற்படவேண்டியுள்ளது என நாம் மீண்டும் மீண்டும் கூறிவந்துள்ளோம். ரி.எம்.வி.பி. கட்சியானது அரசியலில் கால்பதித்த போது பயங்கரவாதிகளின் கொலைக்கரங்களில் இருந்து தம்மையும் மக்களையும் பாதுகாக்க தமது ஆயுதங்களை மீண்டும் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையை, கள யதார்த்தத்தின் இந்த அவசிய நிலைப்பாட்டை நாம் ஆயுதக் குழுக்கள் என்ற ஒற்றைச் சொல் விமர்சனத்தக்குள் அமுக்கிவிட முடியாது என்பதை நாம் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தோம். தமிழர்களின் மூத்த தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் மேற்படி “ஆயுத ஒப்படைப்பு” சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை ஒப்புக்கொண்டு இருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளல் தகும்.
ஆயுத ஒப்படைப்பின் போது உரையாற்றிய கௌரவ சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகப் பெறுமதி வாய்ந்தவையாகும். “அரசியலை ஜனநாயக மயப்படுத்துவோம் ஜனநாயகத்தை மக்கள் மயப்படுத்துவோம்” என அவர் விடுத்துள்ள அறைகூவல் ஜனநாயக விழுமியங்கள் மீது அவரும் அவரது கட்சியும் கொண்டுள்ள பற்றுறுதியை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது இராணுவப் பிரிவை கலைத்திருக்கின்ற நிகழ்வானது மக்கள் நலன் சார்ந்த ஒரு சிறந்த முடிவு என நாம் கருதுகிறோம்.
ஆயுதக் கலாச்சாரத்தின் எச்ச சொச்சங்களை அடியோடு அகற்றி அச்சமற்ற சூழலையும் பொதுமக்களின் சுதந்திரமான வாழ்வையும் உறுதிப்படுத்த இன்நிகழ்வு வழிகோலும் என நாம் ப+ரணமாக கருதுகின்றோம். இந்த ஆயுத ஒப்படைப்பானது கிழக்கு மாகாண மக்களின் ஜனநாயகப் பாதையில் ஓர் மைல் கல்லாகும் என கூறிக்கொள்வதில் நாம் பெருமையடைகிறோம். தொடர்ச்சியாக தாம் ஜனநாயக வழிகளில் முன்னேறி வருவதை இன்நிகழ்வு மூலம் மீண்டும் நிறுவி இருக்கின்ற ரி.எம்.வி.பி. யின் போராளிகளுக்கும் தலைமைப்பீட உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவராகிய கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சந்திரகாந்தன் அவர்களுக்கும் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் நன்றி தெரிவிப்பதோடு எமது மக்கள் சார்பில் மனமுவந்த பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.
தொடர்பு : kilakku@hotmail.com
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply