ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது
ஜனாதிபதி தனது சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னரே தனது தோல்வியினை உணர்த்தும் தேர்தலாக ஊவா தேர்தல் அமையும் என எச்சரிக்கும் ஜே.வி.பி. இராணுவ மயப்படுத்தப்பட்ட தேர்தலில் மக்களின் பலத்தினை காட்ட வேண்டுமெனவும் தெரிவித்தது. மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று பத்திரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஊவா மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலையினை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்க அடியாட்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளும் அரசாங்க உடமைகளை பயன்படுத்துவதும் மிகவும் அதிகரித்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் மாகாண சபைத் தேர்தலுக்காக அரச உடமைகளை அதிகமாக பயன்படுத்திய தேர்தல் இதுவே. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் தோல்வி இப்போதே அவர்களுக்கு தெரிந்து விட்டமையே. ஊவாவில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக லஞ்சம் கொடுக்கப்படுகின்றது. மறுபுறம் பாதுகாப்பு பிரிவினரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அச்சுறுத்துகின்றனர். எதிர்க்கட்சிகளின் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊவாவில் அரசாங்கம் வெற்றியினை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை செய்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது சிம்மாசனத்தை விட்டு கீழிறங்க வேண்டிய காலம் வந்து விட்டது. மக்கள் இன்று இந்த அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையினை இழந்து விட்டனர். மக்களின் பலமும் ஆதரவும் அரசாங்கத்திற்கு இருக்குமாயின் அரசாங்க தரப்பினர் அடாவடித்தனத்தினை கையாள வேண்டிய அவசியம் ஏற்படாது.
எனினும் இன்று நிலைமை மாற்றமடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை விடவும் ஆளும் தரப்பினரே அதிக குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமன்றி இன்று ஊவாவில் இராணுவ படைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் ஊவா தேர்தலுக்காகவே நூற்றுக்கணக்கான இராணுவ மற்றும் அதிரடிப்படை வீரர்களை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடுகள் செய்துள்ளோம். அதேபோல் தேர்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அரசாங்கங்களுடன் முறைப்பாடுகளை செய்துள்ளோம். எனினும் இது தொடர்பில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படுவதில் சந்தேகம் உள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் எதைச் செய்தாலும் மக்கள் தைரியமாகவும் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முன்னரே அரசாங்கம் தனது தோல்வியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேர்தலாக இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தல் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply