விமான நிலையத்தில் நேற்று கோலாகல வரவேற்பு: சீன ஜனாதிபதிக்கு கொழும்பில் அணிவகுப்பு மரியாதை
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அவரது பாரியார் பெங் லியோன் ஆகியோருக்கு நேற்று செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. எயார் சீனாவுக்குச் சொந்தமான போயிங் 747 விசேட விமானம் மூலம் முற்பகல் 11.40 மணிக்கு வந்தடைந்த சீன ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்தினூடாக அழைத்துவரப்பட்ட சீன ஜனாதிபதியை இரு மருங்கிலும் நடனக் கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து சீன ஜனாதிபதியும் அவருடைய பாரியாரும் வாகன பவனியாக கட்டுநாயக்க நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர். விமான நிலையத்தைவிட்டு வெளியேறும் வீதியின் ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் விமான நிலையத்தை சுற்றிலும் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் இலங்கை, சீன கொடிகள் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்பட்டிருந்தன.
விமான நிலையத்திலிருந்து சீன ஜனாதிபதி பயணம் செய்த வாகனம் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை வந்தடையும்வரை வீதியின் இரு மருங்கிலும் பாடசாலை மாணவர்கள்
இலங்கை சீன கொடிகளை அசைத்த வண்ணம் அவருக்கு வரவேற்பளித்தனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் வர்ண ஆடைகளுடன் நடனமாடி சீன ஜனாதிபதியை வரவேற்றனர்.
அதிவேக நெடுஞ்சாலையின் இடையிடையே சீன ஜனாதிபதியைக் கெளரவிக்கும் வகையில் இலங்கை மற்றும் சீன ஜனாதிபதியின் உருவப் படம் பொறிக்கப்பட்ட இருநாட்டு உறவினையும் வெளிப்படுத்தும் பதாகைகளும், இரு நாட்டுக் கொடிகளும் பறக்கவிடப்பட் டிருந்தன.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் 170 பேர் கொண்ட குழுவும் இலங்கை வந்தடைந்தது.
நேற்றுமாலை 5.10 மணியளவில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அவரது பாரியார் அடங்கலான குழுவினர் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தனர். அவர்களை இலங்கை கலாசார உடையணிந்த சிறார்கள் சீன மற்றும் இலங்கை தேசியக் கொடிகளை அசைத்து வரவேற்றனர். அடுத்து இரு நாட்டு ஜனாதிபதிகளும் அவர்களது பாரியார்களும் ஜனாதிபதி செயலக முன்றலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
இரு நாட்டுத் தலைவர்களும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையை வந்தடைந்ததும் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு சீன ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அடுத்து இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதோடு இரு நாட்டு தலைவர்களும் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடங்கலான அமைச்சர்கள் எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சீன ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் சீனத்தூதுக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி கைலாகு கொடுத்து வர வேற்றார்.
நுரைச்சோலை அனல் மின்நிலைய 2ஆம் 3ஆம் கட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பல்வேறு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகருக்கான அடிக்கல்நாட்டுவிழா இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வின் பின் பிரதமர் டி.எம்.ஜயரட்ன மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை சீன ஜனாதிபதி சந்திக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply