மக்களை வெளியேற்றும் திட்டம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்
இலங்கையில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு தாம் வழங்கவிருக்கும் உதவிகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம், இந்தியாவுக்கு விளக்கமளிக்கவுள்ளது.
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினரைச் சந்திக்கச் சென்றிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கருக்கு, இலங்கை விடயம் குறித்தும், மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு தாம் வழங்கவிருக்கும் உதவிகள் குறித்தும் அமெரிக்கா விளக்கமளிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“இலங்கையின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு அங்கு சிலர் இருக்கின்றனர். பொதுமக்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்” என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் அமெரிக்காவின் ஆசிய பிராந்திய கடற்படைத் தலைமையகத்தின் தலைமையில் வடபகுதியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்கும் திட்டம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவ் சங்கர் மேனனின் அமெரிக்க விஜயத்தின் போது விளக்கமளிக்கப்படும் எனத் தெரியவருகிறது.
அமெரிக்காவின் ஆசிய பிராந்தியக் கட்டளைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து இலங்கை இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திச் சென்றதாக ‘த ரெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆசிய பிராந்தியக் கட்டளைத் தளபதிகள் இலங்கை வந்திருந்த சமயம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஜேம்ஸ் மூர் யாழ்ப்பாணத்து நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அங்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை அமெரிக்கா தலைமையிலான இராணுவத்தினர் வெளியேற்றும் திட்டத்தையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை மூர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
எனினும், மனிதநேயப் படைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் அல்லது மனிதநேயப் படைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற இணக்கப்பாடொன்றுக்குச் செல்ல வேண்டும் என த ரெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு இந்தியாவின் உதவி தேவைப்பட்டால் அதனைப் பெற்றுக்கொள்வது பற்றி சிவ் சங்கர் மேனனின், அமெரிக்க விஜயத்தின் போது ஆராயப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply