தீர்ப்புக்கு எதிராக நடக்கும் அ.தி.மு.க. போராட்டம்: ராமதாஸ், விஜயகாந்த் கண்டனம்
அ.தி.மு.க.வினர் நடத்தும் போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளிலும் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நீதிக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை தமிழகத்தில் இப்போது தான் அரங்கேறுகிறது.சென்னை அண்ணா சாலையில் கடந்த 30 ஆம் தேதி 18 இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் அனுமதிக்கப்பட்ட 3 இடங்களைத் தவிர வேறு எங்கும் போராட்டம் நடத்தினால் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்த போதிலும், அ.தி.மு.க.வினரின் போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முன்வரவில்லை; மாறாக ஆளுங்கட்சியினரின் போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்ததுடன், அவர்களுக்கு தேவையான மற்ற உதவிகளையும் செய்தனர். இப்படிப்பட்ட காவல் துறை தான் நியாயமான காரணத்திற்காக போராட அனுமதி கேட்டால், போராட்டம் நடத்துவதற்கான சூழல் இப்போது இல்லை என்று கூறுகிறது. ஒருவேளை அ.தி.மு.க.வினர் நடத்துவது போராட்டமே அல்ல என சென்னை காவல் துறை கருதுகிறது போலிருக்கிறது.
நீதித்துறையை எதிர்த்து கடந்த ஐந்து நாட்களாக அ.தி.மு.க.வினர் நடத்தும் வன்முறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்களால் அப்பாவி பொதுமக்களுக்கு சொல்லொனாத் துயரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேருந்துகளை எரித்த சிலரைத் தவிர இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு காரணமானோரை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை.
வேலை வாய்ப்பு கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பார்வையற்றவர்களை கைது செய்து சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள சுடுகாட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டு தவிக்கவிட்ட மனிதநேயமற்ற காவல்துறையினர், இப்போது வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க.வினரை கைது செய்யத் தயங்குவதில் இருந்தே அவர்களின் பணி அக்கறையையும் நடுநிலையையும் அறிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாடு இப்போது மிகவும் மோசமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ஊழல் செய்ததற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தலைமை, ஆட்சிப்பணியை கவனிப்பதைவிட அதிக நேரத்தை பெங்களூர் சிறைச் சாலைக்கு பயணம் செய்வதிலும், தொலைக்காட்சிகளுக்கு முன்னால் தலைமையின் படத்தை வணங்குவது மற்றும் கண்ணீர் விடுவதிலும் செலவிடும் புதிய முதல்வர், உண்ணாவிரதம் இருப்பதற்காக ஆட்களைத் திரட்டும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்களை கவனிக்க ஆள் இல்லாமல் தமிழக ஆட்சித் தலைமை தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் நிர்வாகத்துறையினரும், காவல் துறையினரும் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட்டால் தான், பொருளாதார வளர்ச்சியில் ஏற்கனவே கடைசி இடத்திற்கு சென்று விட்ட தமிழகத்தை அதைவிட அதலபாதாளத்திற்கு சென்று விடாமல் தடுக்க முடியும். இதை உணர்ந்து ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இல்லாமல், மற்றவர்களுக்கு முன்னுதா ரணமாக தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். எதிர்க் கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதை விடுத்து, நீதிக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:–
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாக, தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வியாபார பெரு மக்களை அச்சுறுத்தியும், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், மருந்து கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், டீக்கடைகள் வரை வலுக் கட்டாயமாக மூடவைத்து பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்க இயலாத நிலையை உருவாக்கி உள்ளனர். புதிய முதல்– அமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அவருடன் சக அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டு பிறகும் இந்த காட்சிகள் எதுவும் மாறியதாக தெரியவில்லை.
சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இது போன்ற போராட்டங்களால் பொதுமக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதிர் கட்சிகள் ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றால், குறைந்த பட்சம் ஒருவார காலத்திற்கு முன்பு அனுமதி கேட்க வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்துகிறது. ஆனால் ஆளும்கட்சிக்கும் அதற்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.
நடைபெறுகின்ற அராஜகங்கள் தடுக்க வேண்டிய காவல் துறை கை கட்டி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. எதற்கெடுத்தாலும் 144 தடை உத்தரவு போடும் அ.தி.மு.க. அரசு மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றும், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை அமல்படுத் தாதது ஏன்?
காவிரி பிரச்சினைக்காக ஜெயலலிதா போராடியதால் தான் அவரை பழிவாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி கடும் தண்டனை வழங்கியதாக ஆளும் கட்சியினர் உள்நோக்கத்தோடும், விஷமத்தனமாகவும் கூறிவருகின்றனர். பல ஆண்டுகாலமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் வழக்கு நடந்த போது அது குறித்து எந்த கருத்தும், குற்றச் சாட்டும் சொல்லாத நிலையில் ஜெயலலிதாவிற்கு பாதகமாக நீதியை நிலை நாட்டும் வகையில் தீர்ப்பு வெளிவந்தவுடன், கன்னடர், தமிழர் என்று பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பது இருமாநில உறவுகளை நிரந்தரமாக பாதிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த தீர்ப்பை அநீதியானது என்றும், தவறான தீர்ப்பு என்றும் விவாதம் செய்து, ஜெயலலிதா ஊழல் செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டதை திசைதிருப்பி, பொது மக்களிடத்தில் இத்தீர்ப்பு குறித்து ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதன் அடிப்படையில் சுவரொட்டிகள் ஓட்டுவதும், விளம்பர பேனர்கள் வைப்பதும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் போன்றவைகளை நடத்துகின்றனர். இச்செயல்கள் அனைத்தும் நீதிமன்ற அவமதிப்பாகும் என சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் அரசியலில் இந்த மகத்தான தீர்ப்பு ஒரு வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. தற்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் வழக்குகளில் சிக்கி குற்றபின்னணி உள்ள கட்சிகளாக உள்ளதென மக்கள் கருதுகிறார்கள்.
எனவே வரும்காலங்களில் ஊழலற்ற, நிலையான மக்களாட்சி மலர வேண்டும் என்ற மனநிலைக்கு தமிழக மக்கள் வந்துள்ளனர். எனவே புதிய மாற்றத்தின் மூலம் ஊழல் என்ற அரக்களை அழித்து நேர்மை, உண்மை, சமூக அக்கறை என்கின்ற தர்மம் தழைத்தோங்க இந்த நல்லநாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply