வெளிவிவகார கண்காணிப்பு எம்பி என்னை தாக்கினார் : கிறிஸ் நோனிஸ்

வெளிவிவகார அமைச்சின் காண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரால் தான் தாக்கப்பட்டதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பில் ´அத தெரண´ செய்திப் பிரிவிற்கு இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் வழங்கிய பிரத்தியேக செவ்வியில்,“ஊடகங்கள் ஏற்கனவே செய்திகள் பரப்பிவிட்டன. வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரால் நான் தாக்கப்பட்டேன் என்பதை உறுதி செய்கிறேன். செப்டெம்பர் 24ஆம் திகதி நியூயோர்க்கில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றது. அன்றைய தினமே நான் எனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்தேன். அதன்பின்னர் உடனே கொழும்பு திரும்பிவிட்டேன். நான் நமது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவை செய்துள்ளேன் என நினைக்கிறேன்.” – என்று தெரிவித்துள்ளார்.

எனினும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

தான் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியுள்ள அவர், வாக்குவாதம் இடம்பெற்றதாக உறுதி செய்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரத்ன, இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீது குற்றம் சுமத்தி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். எனினும் குற்றச்சாட்டு என்ன என்பது இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் கிறிஸ் நோனிஸ் மற்றும் சேனுகா செனவிரத்ன விடயங்கள் குறித்து துரித விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிறிஸ் நோனிஸ் தாக்கப்பட்டது உண்மை எனில் அது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற லக்ஷமன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply