எதிர்க்கட்சிகள் பொது எதிரணியில் களமிறங்குவது அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம்

எதிர்க்கட்சிகள் பொது எதிரணியில் களமிறங்குவது அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடாது. மக்களின் எண்ணங்களும் ஆதரவும் அரசாங்கத்தை பலப்படுத்தும் என தெரிவிக்கும் அரசாங்க பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய யுத்த வெற்றிகளை இனியும் தேர்தலினை அரசாங்கம் வெற்றி கொள்ள முடியாது. அடுத்த தேர்தலில் நாம் புதிய திட்டத்தினை வகுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியினை உருவாக்கும் திட்டம் வகுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நியமித்து அரசாங்கத்திற்கு சவால் கொடுக்க முடியும். பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை தலைமையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சியினை மேற்கொள்ள முடியும். ஆனால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்கி சவால் விடுத்தனர். ஆனால் இறுதியில் அரசாங்கமே மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இம்முறையும் அவ்வாறானதொரு நிலைமையே ஏற்படும்.

அதேபோல் இன்று வரையில் எதிரணி சார்பில் தகுதியான ஒருவரை களமிறக்குவதில் முடிவில்லாத நிலைமை உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி திடமான தீர்மானம் எடுக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணியினர் எவர் மீதாவது ஏறியே சவாரி செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்துடனேயே செயற்படுகின்றது. ஒருவர் இருவர் வெளியேறுவதனால் அரசாங்கம் பின்னடைவினை சந்திக்கப் போவதில்லை. எனவே, இப்போது வரையிலும் அரசாங்கம் மட்டுமே உறுதியாக உள்ளது.

எனினும் அரசாங்கத்தின் கூட்டுக்கட்சி என்ற வகையில் எமக்கு அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த சில காலங்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி கரமானதாக அமையவில்லை. குறிப்பாக பொருளாதார வாழ்வாதார சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் மேலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் பிரிவினைவாத சர்வதேச அழுத்தங்களில் இருந்து எம்மை பாதுகாக்க மேலும் பலமானதொரு நடவடிக்கையினை கையாள வேண்டும்.

யுத்த வெற்றிகளையோ தீவிரவாதத்தையோ கூறி இனிமேல் வெற்றி பெற முடியாது. மக்களின் நம்பிக்கையை பலப்படுத்த நாம் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply