மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த போட்டியிடுவதற்கு மு.கா., ஹெலஉறுமய ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக போட்டியிடுவதில் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ள நிலையில் அரசாங்க பங்காளிக்கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் ஆதரவினை தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டின் முதற் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவதில் சிக்கல்கள் உள்ளதென கடந்த காலங்களில் கருத்துக்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாகவும் போட்டியிடுவதில் எந்த சிக்கலுமில்லை என அரசாங்க சார்பிலும் அரச சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாகவும் வேட்பாளராக போட்டியிடுவதில் சட்ட ரீதியாக எவ்வித அனுமதியும் இல்லை. ஜனாதிபதி உண்மையிலேயே நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதாக இருந்தால் அவர் தனது வேட்பாளர் போட்டியினை விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கையில் சுயாதீன நீதி சட்டத்துறை இல்லாததன் காரணத்தினால் அரசாங்கம் தாம் விரும்பியதையே மேற்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவதில் ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்பினையே தெரிவிக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளது. அதாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாகப் போட்டியிட சட்ட ரீதியிலும் யாப்பு ரீதியிலும் அனுமதிக்கப்படவில்லை. 18வது திருத்தம் கொண்டு வரப்பட்ட பின் ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தாலும் அது மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொருந்தாது. எனவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போட்டியிட்டால் அது சட்டவிரோத தேர்தலாகவே அமையும். அவ்வாறானதொரு தேர்தலை நாம் எதிர்க்கின்றோம் எனவும் இது தொடர்பில் நாடு பூராகவும் கருத்தரங்குகள் நடத்துவோம் எனவும் ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதேபோல் ஜனநாயகக் கட்சியும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டிலேயே உள்ளது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் மஹிந்த ராஜபக் ஷ என்ற தனி மனிதரை காட்டி வாக்குகளை பெற முடியுமே தவிர வேறு ஒருவரை நிறுத்துவது சாத்தியமாகாது. எனவேதான் அரசாங்கம் சட்ட திட்டங்களை மாற்றியமைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாவது தடவையாக போட்டியிட வைக்க முயற்சிக்கின்றனர். இது முற்றிலும் ஜனநாயகத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் முரணனான செயற்பாடாகும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவது முரண்பாடான விடயமாக இருக்கின்றது. குறிப்பாக 18வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட போதே நாம் எதிர்த்து விட்டோம். அவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவதில் நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். அதேபோல் அரசாங்க தரப்பினர் தமக்கு ஏற்ற வகையில் சட்ட திட்டங்களை மாற்றி எத்தனை தடவையேனும் போட்டியிடலாம் என்ற கொள்கையினை உருவாக்க முயற்சிக்கின்றனர். எனினும் இது நீதி முறைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும் எனவும் தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பினை தெரிவித்திருக்கும் நிலையில் அரசாங்க பங்காளிக்கட்சிகள் தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கையில்,
நாட்டில் அதிகாரப்பகிர்வு எற்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆரம்பத்தில் 18வது திருத்தத்தினை ஆதரித்து தவறிழைத்து விட்டோம். எனினும் இப்போது 17வது திருத்தத்தின் அவசியமுள்ளது. அதனை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் வலியுறுத்தி வருவோம். ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் யாரும் போட்டியிடுவதில் எமது தனிப்பட்ட கருத்து இல்லை. அதேபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவை போட்டியிடுவதில் நாட்டிற்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ தாக்கம் எதுவும் ஏற்படப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
அதேபோல் ஜாதிக ஹெல உறுமயவின் இணைச்செயலாளரும் மேல்மாகாண அமைப்பாளருமான உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது. அதற்காகத்தான் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையும் போட்டியிடுவதில் நாம் ஆதரவினையே தெரிவிப்போம். அத்தோடு சட்டச்சிக்கல்களையும் யாப்பினையும் தாண்டி நாட்டு மக்களின் விருப்பம் என்றவொன்று உள்ளது. அதனை கருத்திற்கொள்ளவும் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply