ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்: தேவேகவுடா
ஹசன் மாவட்டம் அரிசிக்கெரேயில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருப்பதால் தினமும் அவரது ஆதரவாளர்கள் சிறை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாநில போலீசாருக்கும், அரசுக்கும் ஒரு பதற்ற நிலை உண்டாகிறது. இதன் மூலமாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையும் உருவாகலாம். இதனால் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கு கர்நாடக அரசு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
விஜயதசமி விழாவின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய பேச்சு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதற்கு முன்பு அந்த சேனலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை. இவ்வாறு ஒளிபரப்புவது தவறு. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு அளிக்கக்கூடாது.
காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் மோடி எனக்கு ‘டுவிட்டரில்’ வாழ்த்து செய்தி அனுப்பியது உண்மைதான். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நான் ஹசன் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்ததற்காக அந்த செய்தியை எனக்கு அனுப்பி இருந்தார். அதில், “முன்னாள் பிரதமரான நீங்கள் நான் அறிமுகப்படுத்திய ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு நன்றி” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply