இலங்கை முகம்கொடுக்கும் சவால்கள் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் : ரவிநாத் ஆரியசிங்க

30 வருட பயங்கரவாத மோதலுக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீண்டெழுந்துவரும் நாடு என்ற ரீதியில் இலங்கை முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சிவில் மற்றும் அரசியலுரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தில் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த விவாதம் கடந்த 7 ஆம் 8 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் பதிலளித்து உரையாற்றும் போதே ரவிநாத் ஆரியசிங்க இவ்வாறு கூறினார்.

இலங்கையில் சிவில் மற்றும் அரசியலுரி மைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் உறுப்பு நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை குறுகிய காலத்தில் மீள்குடியேற்றுவதற்கும், 12000 முன்னாள் புலி உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைப்பதற்கு குறுகிய காலத்தில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

30 வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் நாட்டு மக்களின் சிவில் மற்றும் அரசியலுரிமையை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் எவரும் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இடமளிக்கவில்லை. இவ்விடயத்தில் அரசாங்கம் வெற்றிகண்டுள்ளது.

இலங்கையின் சிவில் மற்றும் மனித உரிமை தொடர்பாக உறுப்பு நாடுகள் கவனம் செலுத்தும் போது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பக்கம் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு வட மாகாணத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டு அங்கு மக்களின் அரசியலுரிமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply