மராட்டிய தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 15–ந் தேதி நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் சயான் கோலிவாடா தொகுதியில், தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள இவரது சொந்த ஊர் பரமகுடி. 2 முறை மும்பை மாநகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள தமிழ்ச்செல்வன், தமிழர்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மராட்டிய மாநிலத்தில் போராட்டம் நடத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக மும்பையில் நடந்த பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். வைகோ எழுதிய ‘ஈழத்தின் இன கொலை– இதயத்தில் ரத்தம்’ என்ற புத்தகம் 2 வருடங்களுக்கு முன்பு மராட்டிய மொழியில் மும்பையில் வெளியிடப்பட்டது. ‘சிடி’களும் வெளியிடப்பட்டன.
வைகோ முன்னிலையில் ராம்ஜெத்மலானி இவற்றை வெளியிட்டார். இந்த விழாவுக்கு தமிழ்ச் செல்வன் ஏற்பாடு செய்தார். எனவே, தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்ய வைகோ முடிவு செய்தார்.
அதன்படி வைகோ மராட்டிய மாநிலத்தில் தமிழ்செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். சயான் கோலிவாடா தொகுதியில் இன்று மாலை 6 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்.
தொகுதி முழுவதும் வைகோ சுற்றுப்பயணம் செய்கிறார். இங்கு வாழும் தமிழர்களிடம், தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ஓட்டு கேட்கிறார்.
இந்த தகவலை ம.தி.மு.க. இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply