பாகிஸ்தானில் இம்ரான்கான் கூட்டத்தில் நெரிசல்: 8 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் முறைகேடு மூலம் பிரதமர் நவாஸ்செரீப் ஆட்சியை பிடித்ததாக பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் குற்றம் சாட்டினார். எனவே நவாஸ்செரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஆகஸ்டு 15–ந்தேதி முதல் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளு மன்றம் முன்பு கட்சி தொண்டர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி ‘பாத்’ கட்சி தலைவர் தகிர்– உல்–காத்ரியும் அவருடன் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்.இஸ்லாமாபாத்தில் பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடைபெறும் வேளையில் இம்ரான்கான் மற்ற நகரங்களிலும் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மத்திய பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் இம்ரான்கான் கட்சியினர் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி முடிவில் முல்தானில் உள்ள ஒரு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்ததும் மைதானத்தில் இருந்து பொதுமக்கள் முண்டியடித்தபடி வெளியேறினார்கள்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றாலும் பிரதமர் பதவியில் இருந்து விலக நவாஸ்செரீப் மறுத்து விட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நவாஸ்செரீப்பை முற்றுகையிட சென்ற அவரது கட்சி தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதலும், கலவரமும் ஏற்பட்டது.
அதில் 3 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். செப்டம்பர் 11–ந்தேதி அரசு தொலைக்காட்சி நிலையத்தை எதிர்க்கட்சியினர் கைப்பற்றினர். அதை ராணுவம் முறியடித்து மீட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply