பயங்கரவாதிகளுக்கும் பயங்கர ஆயுதங்களுக்கும் எதிராகவே நாம் போராட்டம் நடத்தினோம் : கிளிநொச்சியில் மகிந்த
வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது. எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடமாகாணத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் போருக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.50 மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி, மக்கள் மத்தியில் சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பயங்கரவாதிகளுக்கும் பயங்கர ஆயுதங்களுக்கும் எதிராகவே நாம் போராட்டம் நடத்தினோம். உங்களுடைய எதிர்காலத்துக்காகவும் உங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவுமே நாம் போராட்டம் நடத்தினோம்.
2009 மே 19ஆம் திகதி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் நீங்கள் விமோசனம் பெற்றுள்ளீர்கள்.
உங்களுடைய பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கியிருந்த நீங்கள், இப்போது அதிலிருந்து மீண்டுள்ளீர்கள்.
போர்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள் காரணமாக நீங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளீர்கள். இப்போது அந்த ஆபத்து இல்லை.
வடபகுதியை அபிவிருத்தி செய்ய நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
வடமாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது. எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை.
நாம் அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் இந்த நிகழ்வுக்கு சமுகமளிக்கவில்லை.
பயங்கரவாதிகள் உங்கள் வாழ்விடங்களில் புதைத்த கண்ணிவெடிகளை அகற்றி மீள்குடியேற்றத்துக்கு வழிசெய்தோம், பாழடைந்துபோன வீதிகளைப் புனரமைத்து போக்குவரத்தை இலகுபடுத்தினோம்.
படையினர் வசமிருந்த பல காணிகளை விடுவித்து சொந்த மக்களிடம் கையளித்தோம் யுத்தத்தின்போது சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்தி சமூகத்துடன் இணைத்துள்ளோம்.
இப்போது உங்கள் காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குகிறோம்.
கிளிநொச்சி மாவட்டத்தை புதிய நிர்வாக நகரமாக மாற்றி அபிவிருத்தி செய்து வருகிறோம். அபிவிருத்தி வேறு அரசியல் வேறு. அதை நீங்கள் உணருவீர்கள். அரசியல் மட்டும் செய்து மக்களை, அவர்களது எதிர்பார்ப்புக்களை திருப்திப்படுத்த முடியாது.
மக்கள் சேவையே மகேசன் சேவை. இதன்மூலம் தான் நாட்டை எல்லா வழிகளிலும் அபிவிருத்தி செய்யமுடியும். நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழ்வோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply