யாழ்-கொழும்பு புகையிரத சேவை இன்றிலிருந்து மீண்டும் ஆரம்பம்

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையிலான புகையிரத சேவைகளை சுமார் 24 வருடங்களின் பின்னர் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துவைக்கவுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி காலை 9.30 மணிக்கு பளையிலிருந்து யாழ்தேவி புகையிரத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தைத் திறந்துவைத்து இச்சேவைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக பளை, கொடிகாமம், நாவற்குழி, யாழ்ப்பாணம் ஆகிய புகையிரத நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கும் பளைக்கும் இடையிலான புகையிரத சேவையின் பரீட்சாத்த சேவைகள் கடந்த மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து தடைப்பட்டிருந்த கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு இடையிலான புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஓமந்தைக்கான யாழ்தேவியின் சேவைகள் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் கிளிநொச்சிக்கான யாழ்தேவியின் சேவைகள் கடந்த 2013ஆம் ஆண்டு செம்ரம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து பளை வரையிலான யாழ்தேவியின் சேவைகள் கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவியின் சேவைகள் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. மேலும் இவ்வருட இறுதிக்குள் யாழ்தேவி காங்கேசன்துறைவரை பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

போருக்குப் பின்னர் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கிடையிலான புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதையையும் புகையிரத நிலையங்களையும் இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவியின் நிகழ்வில் இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பளை புகையிரத நிலையத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி, யாழ்தேவி புகையிரதத்தில் பயணித்து கொடிகாமம், நாவற்குளி ஆகிய பகுதிகளில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையங்களைத் திறந்து வைக்கவுள்ளதுடன் முற்பகல் 10.30 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்தைத் திறந்து வைத்து அங்கு இடம்பெறவுள்ள நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன் பின்னர் முற்பகல் 11 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயவுள்ளார். இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.15 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அன்று பிற்பகல் 2.15 மணிக்கு அரசாங்க ஊழியர்களுக்கு யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வைத்து 2 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களையும் வழங்கிவைக்கவுள்ளார்.

இதன்பின்னர் பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதயா தொழில் நுட்ப ஆய்வு கூடத்தைத் திறந்து வைக்கவுள்ளார். இதேபோல் மாலை 5.15 மணிக்கு யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதயா தொழில்நுட்ப ஆய்வு கூடத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.

இதற்காக யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலகம், புகையிரத நிலையம் பாடசாலைகள் என்பனவும் வீதிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் நாளை செவ்வாய்க்கிழமை தீவுப் பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ, அங்கு காலை 9 மணிக்கு நயினை நாகபூசனி அம்பாள் ஆலயத்திலும் நாகவிகாரையிலும் இடம்பெறவுள்ள விசேட பூசை வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன் பின்னர் முற்பகல் 10 மணிக்கு நெடுந்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, நெடுந்தீவு பிரதேச செயலகக் கட்டத் தொகுதியைத் திறந்துவைக்கவுள்ளார்.

முற்பகல் 10.45 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதயா ஆய்வு கூடத்தையும் திறந்து வைக்கவுள்ளார். முற்பகல் 11.30 மணிக்கு அங்குள்ள இரு பிரதேசங்களுக்கான மின் இணைப்புக்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதன் பின்னர் வேலணைப் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி நண்பகல் 12.15 மணிக்கு வேலணை பிரதேச செயலக கட்டத் தொகுதியைத் திறந்துவைக்கவுள்ளார்.

பிற்பகல் ஒரு மணிக்கு ஊர்காவற்துறைக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு சென் அன்ரனிஸ் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதயா ஆய்வு கூடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு காரைநகருக்கு விஜயம் செய்யவுள்ளா ஜனாதிபதி, தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் (காரைநகர் இந்து கல்லூரி) நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதேபோல் பிற்பகல் 4.30 மணிக்கு வட்டுக்கோட்டைக்கு விஜயம் செய்து வட்டு இந்துக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதயா ஆய்வு கூடத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் ஜனாதிபதியின் விஜயத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் ஆர்வங்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply