புழல் சிறைக்கு ஜெயலலிதா மாற்றப்படுவாரா?

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா கைது விவகாரம் தமிழக–கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதையடுத்து ஜெயலலிதாவை, தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான தேவேகவுடா தெரிவித்தார்.

இதற்கிடையே இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி. ஜெய் சிம்ஹா ஜெயலலிதா கோரிக்கை வைத்தால், அதுபற்றி பரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா தமிழகத்தில் புழல் சிறைக்கு மாற்றப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பணிகளில் அ.தி.மு.க. அமைச்சர்களும், வக்கீல் பிரிவினரும் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டுமானால் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

அப்போது, அவர்கள், இந்த விவகாரத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு போட வேண்டும் என்றும், அந்த மனுவை ஏற்றுக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தால் மட்டுமே அவரை தமிழக சிறைக்கு மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்கிற கேள்வியே அ.தி.மு.க.வினர் மத்தியில் நிலவி வருகிறது. கர்நாடக ஐகோர்ட்டில் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை (17–ந்தேதி) விசாரணைக்கு வருகிறது.

அன்றைய தினம் ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தால், தீபாவளி விடுமுறைக்கு பின்னரே ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற வாய்ப்பு உள்ளது. இதில் எந்தமாதிரியான முடிவுகளை கோர்ட்டு எடுக்கிறது என்பதை பொறுத்துதான் தமிழக சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவதற்கான முயற்சிகளில் அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply