இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு காஷ்மீர் பிரச்சனையே அடிப்படை காரணம்: பெனாசிர் பூட்டோ மகன் பேச்சு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதற்கு அவ்வப்போது இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல்களால் இருதரப்பிலும் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலவல் பூட்டோ சர்தாரி பாகிஸ்தானின் சிந்து மாகாண பாராளுமன்றத்தில் பேசும்போது கூறியதாவது:-இந்தியா – பாகிஸ்தான் இடையேயான விரோதபோக்கு மற்றும் மோதலுக்கு அடைப்படை காரணம் புரையோடிப்போன காஷ்மீர் பிரச்சினை தான். காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சினையில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கோரிக்கை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் தான் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மாதம் நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டத்தில் பிலவல் பூட்டோ பேசும்போது, ‘‘நான் காஷ்மீர் முழுவதையும் மீட்டு எடுப்பேன். அதில் ஒரு அங்குலம் கூட நான் விடப்போவதில்லை. ஏனென்றால் பாகிஸ்தானில் உள்ள மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீரும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது தான்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் பாகிஸ்தானின் மக்கள் கட்சி இந்தியாவுடன் நல்லுறவு வைத்திருக்கவே விரும்புகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply