ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பலதரப்பட்ட கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இ.தொ.கா உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஐ.தே.கட்சி விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சி பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மேலும், அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு காலப்பகுதியில் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பினர்கள் பலர் ஐ.தே.கட்சியுடன் இணையவிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவதா அல்லது கட்சியில் ஒருவரை களமிறக்குவதா என்பது தொடர்பில் ஐ.தே.கட்சி கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி முறைமையை நீக்குவதே எதிர்க்கட்சிகளின் பிரதான இலக்காகவுள்ளது.

இதற்கமைவாக அரசின் தற்போதைய சில பங்காளி கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளும் ஐ.தே.கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவுள்ளது.

இருப்பினும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தற்போது இரகசியமான முறையில் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேசரிக்கு தகவலளித்தார்.

அத்தோடு சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது சிவில் அமைப்பு தொழிற்சங்கங்களுடன் எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.கட்சி தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் தரப்பினர்கள் பலர் ஐ.தே.க. வில் இணைவு

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு இதுவரை விடுக்கப்படாத நிலையில் குறித்த அறிவிப்பு விடுக்க முன்பு அல்லது விடுக்கப்பட்ட பின்பு ஆளும் தரப்பிலிருந்து பலர் ஐ.தே.க. வுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கமைய அடுத்த வருடத்திற்கான வரவு – செலவு திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் காலப்பகுதியில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் ஐ.தே.க. வுடன் இணையவிருப்பதுடன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு மேலும் பலர் ஐ.தே.கட்சியில் இணையவுள்ளனர்.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிடுகையில்;

ஐ.தே.கட்சியுடன் பெருந்தொகையானோர் இணையவுள்ளனர். குறித்த நபர்களை தற்போது குறிப்பிட முடியாது. எனவே உரிய நேரத்தில் ஐ.தே.கட்சியில் இணைந்து கொள்வர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply