புலிகள் பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு ரத்து: நீதிமன்றம் உத்தரவு
ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை ரத்து செய்து லக்ஸம்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பதில் ஐரோப்பிய கவுன்சில் கையாண்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடககத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஐரோப்பிய நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பொருத்தக்கூடிய சர்வதேச விதிகளையும் அளவுகோல்களையும் விடுதலைப் புலிகளுக்கு பொறுத்த முடியாது என்ற புலிகள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அறிக்கை
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும் விஷயம் இந்த உத்தரவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி ஐரோப்பிய கவுன்சிலுக்கு இலங்கை அரசு இதுவரை தகவல் வழங்கி வந்ததுபோலவே இனியும் தொடர்ந்து தகவல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஐரோப்பிய ஆணையம் செய்யும் மறு பரிசீலனையிலும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply